சூர்யா - பாலா மோதல்... ஒரே புகைப்படத்தால் வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த நடிகர் சூர்யா..!

’சூர்யா 41’ படப்பிடிப்பில் சூர்யாவுக்கும் இயக்குனர் பாலாவுக்கும் மோதல் ஏற்பட்டுவிட்டதாக பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், நடிகர் சூர்யா டுவிட் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து அனைத்து வதந்திக்கும் முற்றுபுள்ளி வைத்துள்ளார்.

சூர்யா - பாலா மோதல்... ஒரே புகைப்படத்தால் வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த நடிகர் சூர்யா..!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் சூர்யாவின், ஆரம்பகால திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு ரீச் இல்லை என்றே சொல்லலாம். இதனையடுத்து நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவின் கூட்டணியில் இணைந்த பிறகு வெளிவந்த நந்தா, பிதாமகன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் இந்த இரண்டு படங்களிலுமே நடிகர் சூர்யா தன் நடிப்பு திறமையை காட்டி முத்திரை பதித்துவிட்டார். இந்த படங்களுக்கு சூர்யா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, பாலாவுடன் ஒரு சகோதரப் பாச பிணைப்பையும் வெளிப்படுத்தி வந்தார். அதற்கு பிறகு காக்க காக்க, வாரணம் ஆயிரம் என பல வெற்றிப்படங்களை கொடுத்து சினிமாவில் ஒரு நட்சத்திரமாக உயர்ந்தார். 

இப்படி தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் சூர்யா, மீண்டும் இயக்குனர் பாலாவுடன் ’சூர்யா 41’ படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார் என தகவல் வெளியானது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. 

பாலா - சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் இந்தபடத்தில் மீனவனாக நடிக்கும் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். சூர்யாவின் ‘2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதியில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. அப்போது பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து சூர்யா படப்பிடிப்பில் இருந்து வெளியேறி சென்னை திரும்பி விட்டதாகவும் கூறப்பட்டது. இதற்கு பதிலளித்த ’சூர்யா 41’ படக்குழுவினர் இது வெறும் வதந்தி தான் எனக்கூறி மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

ஆனாலும் மீண்டும் மீண்டும் வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில் பாலாவுடன் இருக்கும் புகைப்படத்தை  பகிர்ந்த சூர்யா, ‘படப்பிடிப்புக்கு மீண்டும் தயாராக உள்ளோம்’ என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தின் மூலம் நடிகர் சூர்யா இந்த படம் குறித்து பரவிய அனைத்து வதந்திகளுக்கும் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.