சர்ப்ரைஸ்.. அட்லீக்கு நேரில் சென்று வாழ்த்து சொன்ன விஜய், ஷாருக்கான்..!

36-வது பிறந்தநாளை நட்சத்திரங்கள் சூழ கொண்டாடிய இயக்குநர் அட்லீ..!

சர்ப்ரைஸ்.. அட்லீக்கு நேரில் சென்று வாழ்த்து சொன்ன விஜய், ஷாருக்கான்..!

அட்லீ:

பிரம்மாண்ட இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த அட்லீ 2013-ம் ஆண்டு நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா ஆகியோரது நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ராஜா, ராணி என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.  

விஜய்-அட்லீ:

ராஜா ராணி ஹிட்டானதை தொடர்ந்து நேரடியாக முன்னணி நடிகரான விஜய்யை சில காலம் குத்தகைக்கு எடுத்திருந்தார். தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து விஜய்யை வைத்து வெற்றி படங்களை கொடுத்து வெற்றி இயக்குநர்கள் பட்டியலில் இணைந்தார் அட்லீ. 

இயக்குநர் டூ தயாரிப்பாளர்:

இயக்குநராக தனது வெற்றிகளை கொடுத்தவர், தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். 'A for Apple Productions’ என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம், ஜீவா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற காமெடி படத்தை தயாரித்திருந்தார் அட்லீ. அதேபோல அர்ஜூன் தாஸ், வினோத் கிஷன் நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியான அந்தாகாரம் என்ற படத்தையும் தயாரித்திருந்தார். 

சர்ச்சைகள்:

சினிமாவில் வளர வளர பல எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றுத் தானே ஆக வேண்டும். அதேபோல தான், அட்லீயும் சில எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளானார். உதாரணத்திற்கு தனது நிறத்திற்காகவும், இவர் இயக்கும் படங்கள், காப்பி அடிக்கப்பட்ட படங்கள் எனவும் பல விமர்சனங்களை எதிர்கொண்டார் அட்லீ. 

பாலிவுட்டில் கால் தடம்:

அவற்றை எல்லாம் புறம்தள்ளி, கோலிவுட்டில் இருந்து தற்போது பாலிவுட் சென்றிருக்கிறார் அட்லீ. அங்கு பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் மற்றும் நயன்தாரா ஆகியோரை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். 

பிறந்தநாள் கொண்டாட்டம்:

இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி அட்லீ தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடினார். நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளம் வாயிலாக தெரிவித்து வந்தனர். 

ஷாருக்கானும்,விஜய்யும்:

அத்தோடு தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டாரான விஜய்யும், பாலிவுட் திரையுலகின் முன்னணி ஸ்டாரான ஷாருக்கானும், அட்லீயை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படத்தை அட்லீ தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.