டப்பிங் சங்கத்துக்கு வைத்த சீலை அகற்ற வேண்டும்- உயர்நீதி மன்றம் 

டப்பிங் சங்கத்துக்கு வைத்த சீலை அகற்ற வேண்டும்- உயர்நீதி மன்றம் 

டப்பிங் சங்கத்துக்கு வைக்கப்பட்ட  சீலை அகற்ற வேண்டுமென சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி டப்பிங் சங்கத்துக்கான கட்டடம் கடந்து 2011 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சென்னை மாநகராட்சியிடம் பெற்ற திட்ட அனுமதியை மீறி கட்டடம் கட்டப்பட்டுள்ளதற்காக சங்க உறுப்பினர் ஒருவர் புகார் அளித்ததையொட்டி கடந்த மார்ச் 11ம் தேதி கட்டடத்திற்கு சென்னை மாநகராட்சியால் சீல் வைக்கப் பட்டது.

இந்த நிலையில் சங்க கட்டிடத்திற்குள் உள்ள ஆவணங்கள், மேசைகள் உள்ளிட்டப் பொருட்களை எடுப்பதற்காக சங்க கட்டிடத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்ற கோரி தென்னிந்திய, திரைப்பட தொலைக்காட்சி டப்பிங் சங்கத்தின் பொது செயலாளர் கதிரவன் என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது நீதிபதி வேலுமணி மற்றும் நீதிபதி லக்ஷ்மி நாராயணன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் கோரிக்கையை ஏற்று வரும் ஏப்ரல் 17ம் தேதி வரை தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி டப்பிங் சங்கத்துக்கான கட்டடதிற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றவும் மீண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி சீலை வைக்கவும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.