SK22-வின் தலைப்பு இது தானா?

கடந்த சில தினங்களாக சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

SK22-வின் தலைப்பு இது தானா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் இவரது நடிப்பில் முன்னதாக வெளியான டான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் அள்ளியது.

அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். அதன் பின்னர் தற்போது அனுதீப் இயக்கத்தில் உருவாகி வரும் பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக உக்ரைன் பட நடிகை ரியா போஷாப்கா நடிக்கிறார்.  

இந்த படத்தை தொடர்ந்து தற்காலிகமாக SK 22 என பெயரிடப்பட்டிருந்த மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஷ்வினுடன் இணைந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்கான அறிவிப்பு முதலில் ஜூன் 28 ம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், இதுகுறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

அதன் பின்னர் ஜூலை 15 ம் தேதி இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது. அந்த வகையில் இன்று இந்த படத்திற்கான தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு மாவீரன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு ஆடை, மண்டேலா படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கான தலைப்பு அறிவிப்புக்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.