இரவின் நிழல் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு..!

இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள, முதல் நான் லீனியர் படமான இரவின் நிழல் படத்தின் வெளியீட்டுத் தேதியை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இரவின் நிழல் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு..!

தனது வித்தியாசமான முயற்சிகளின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் ஆர். பார்த்திபன் இயக்கம், நடிப்பு என இரண்டையும் சமமாக செய்து வருகிறார். தற்போது அவரின் கைவண்ணத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி உள்ளது இரவின் நிழல் படம்.

கலையின் மீது என்றும் தீராத தாகத்தோடு தொடர்ந்து புதுப்புது வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குனர் பார்த்திபனின் அடுத்த சாதனை முயற்சியாக உலகில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாகியுள்ள இரவின் நிழல் திரைப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.

பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரிப்பில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் படத்தின் காட்சிகள் திரையிடப்பட்டது இந்தப் படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இரவின் நிழல் திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 15-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்தைக் காண சினிமா ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து இருக்கின்றனர்.

இதற்கு முன்னதாக பார்த்திபன் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு ஆஸ்கார் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது கிடைக்காமல் போனது. எப்படியாவது ஆஸ்கார் விருதை வாங்கிவிட வேண்டும் என்றே இந்த உலக சாதனை படத்தை உருவாக்கி உள்ளார் பார்த்திபன்.