90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சூப்பர் ஹீரோவான சக்திமான் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்கா?

கடந்த பிப்ரவரி மாதம் சக்திமான் படம் பற்றின அறிவிப்பு வெளியானது..!

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சூப்பர் ஹீரோவான சக்திமான் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்கா?

எவ்வளவு சூப்பர் ஹீரோக்கள் இப்போ வரிசை கட்டி வந்தாலும் 90ஸ் கிட்ஸ்க்கு ஆல் டைம் ஃபேவரைட் சூப்பர் ஹீரோ சக்திமான் தான். அவர அடிச்சுக்க எந்த ஒரு சூப்பர் ஹீரோவும் இன்னும் வரல. சின்னத்திரையில இருந்து வெள்ளித்திரையில சக்திமான் வரப்போறாராம். அந்த கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 13ம் தேதி 1997-ம் ஆண்டு உதயமானார் சக்திமான் என்னும் சூப்பர் ஹீரோ. 90ஸ் காலகட்டத்தில் எல்லாம் சிறுவர்களை கவர்வதற்கென பல சீரியல்கள் வெளிவந்தன. அப்படி வெளியான சீரியல்களில் மிக முக்கியமான, சிறுவர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒரு சீரியல் சக்திமான். அதேபோல அன்றைய காலத்தில் நாம் கண்ட முதல் சூப்பர் ஹீரோவும் அவர் தான். சிவப்பு மற்றும் தங்க நிறங்களில் உடை அணிந்து காற்றோடு காற்றாக சுழன்று வந்து சக்திமான் வரும் காட்சியே கண்கொள்ளாத காட்சியாக இருக்கும். 

பிப்ரவரியில் சக்திமான் படம் பற்றி அறிவிப்பு..

சக்திமானாக இந்த தொடரில் நடித்து கலக்கியவர் முகேஷ் கன்னா என்பவர். சக்திமான் தொடர் வெளியானதில் இருந்து அனைத்து சிறுவர்களுக்கும் பிடித்தமான உடையாக சக்திமான் உடை தான் இருந்தது. அந்த உடையை அணிந்தாலே தானும் ஒரு சக்திமான் ஆகிவிட்டதாக எண்ணி செய்த அலப்பறைகள் இன்று நினைத்தால் சிரிப்பு தான் வரும். அது ஒரு அழகிய காலம்.. சரி இப்போது கதைக்கு வருவோம். சக்திமான் கதாபாத்திரத்திற்கு நடிப்பால் உயிர்கொடுத்த முகேஷ் கன்னா, சக்திமான் தொடரை ஒரு படமாக தயாரிக்கவுள்ளார். அதன் டீசர் மற்றும் படம் பற்றின அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. அதில் இந்தியாவின் முக்கிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் சக்திமான் ரோலில் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

சக்திமான் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்?

1997-ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை அதாவது கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஓடிய இத்தொடர் படமாக்கப்படுகிறது என்ற அறிவிப்பை கேட்டு 90ஸ் கிட்ஸ்கள் மிக ஆவலாக உள்ளனர். இந்த நிலையில், சக்திமான் என்ற சூப்பர் ஹீரோவாக பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் நடிக்க இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.