லைகா புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்ட  தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் - பி வாசு இணையும் 'சந்திரமுகி 2'...! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, 'வைகை புயல்' வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

லைகா புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்ட  தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் - பி வாசு இணையும் 'சந்திரமுகி 2'...! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. இப்படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாக வாசு முயற்சித்து வருகிறார். ஆனால் ரஜினி இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என சொல்லப்பட்டது.

இதனால் இரண்டாம் பாகத்தை வேறு கதாநாயகர்களை வைத்து எடுக்க முயன்று வந்த நிலையில் இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் சம்மதம் தெரிவிக்கவே அதற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். 

மேலும் இப்படத்தை தயாரிப்பதற்கு லைகா நிறுவனம் சம்மதித்தது. இதனையடுத்து படத்தின் தலைப்பை பெறுவதில் ஆர்வம் காட்டி வந்த லைகா நிறுவனம், இந்த படத்தின் முதல் பாகத்தைத் தயாரித்த சிவாஜி கணேசன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வைத்திருந்த டைட்டில் உரிமையை பெறுவதற்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் கூறப்பட்டது. 

இந்நிலையில் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில்  'சந்திரமுகி 2' எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார். 'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டான்' படத்தின் மாபெரும் வசூல் சாதனையைத் தொடர்ந்து, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'பொன்னியின் செல்வன் முதல் பாகம்' படத்திற்கு சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றியைப் பெற்ற 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரிப்பதால், 'சந்திரமுகி 2' படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகும் போதே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.