உலகம் முழுவதும் வெளியான பொன்னியின் செல்வன்.. விழாக் கோலம் பூண்ட திரையரங்குகள்..!

ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்களுடன் ரசிகர்கள் நடனமாடி மகிழ்ச்சி..!

உலகம் முழுவதும் வெளியான பொன்னியின் செல்வன்.. விழாக் கோலம் பூண்ட திரையரங்குகள்..!

பொன்னியின் செல்வன்:

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. அதிகாலை முதலே திரைப்படத்தைக் காண குவிந்து வரும் ரசிகர்களால், திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

நட்சத்திர பட்டாளம்:

தமிழில் மிகவும் புகழ்பெற்ற கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல், மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியுள்ளது. லைகா ப்ரொடக்சன் தயாரிப்பில் மிகப்பெரும் பொருட் செலவில் இரு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். 

5 மொழிகளில் வெளியாகியுள்ளது:

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு தமிழின் மூத்த எழுத்தாளரான ஜெயமோகன் வசனம் எழுத, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.

திரையரங்கில் குவிந்த ரசிகர்கள்:

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் அதிகாலை 4:30 மணி காட்சியைக் காண, மூன்று மணி முதலே குவியத் தொடங்கிய ரசிகர்கள், ஆட்டம் பாட்டத்துடன் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாட தொடங்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் குவிந்து வருவதால் திரையரங்குகள் விழாக் கோலம் பூண்டுள்ளன.