வெளியானது நயன்தாரா - விக்னேஷ் சிவன் மணக்கோல புகைப்படம்..! இணையத்தில் வைரல்

மாமல்லபுரம் நட்சத்திர ஓட்டலில் கண்ணாடி மாளிகையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது.

வெளியானது நயன்தாரா - விக்னேஷ் சிவன் மணக்கோல புகைப்படம்..! இணையத்தில் வைரல்

6 வருடங்களாக காதலித்து வந்த நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது திருமணம் என்னும் பந்தத்தில் அடியெடுத்து வைத்துள்ளனர். அவர்களது திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று கோலாகலமாக நடந்தேறியுள்ளது. இந்து முறைப்படி விக்னேஷ் சிவன் நயன்தாராவின் கழுத்தில் மங்கள நாண் அணிவித்து தனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டார். 

பிரத்யேகமாக அமைக்கப்பட்ட விசேஷ கண்ணாடி மாளிகையில் அரங்கு அமைக்கப்பட்டு இவர்களின் திருமணம் நடந்துள்ளது. விக்னேஷ் - நயன்தாராவின் திருமண நிகழ்ச்சியை தனியார் ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பும் உரிமையை 25 கோடி ரூபாய்க்கு விற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்தையும் நயன்தாராவின் சினிமா வாழ்க்கையையும் உள்ளடக்கி ஒரு சினிமா போல் படமாக்கி தரும் பொறுப்பை இயக்குநர் கவுதம் மேனனிடம் ஒப்படைத்து இருப்பதாக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியில் கசிந்து விடாமல் இருக்க திருமணத்தில் பங்கேற்க வரும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் நெற்றியில் முத்தமிட்டு தன் மகிழ்வினை வெளிபடுத்தி உள்ளார். இந்த புகைப்படத்தினை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இவர்கள் இருவரின் மணக்கோல புகைப்படம் தான் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.