இளையராஜாவை தொட்டுத் தூக்கியவர் பஞ்சு அருணாச்சலம் : இயக்குநர் பாரதிராஜா பேச்சு !!

பஞ்சு அருணாச்சலம் இல்லை என்றால் இசைஞானி இளையராஜா பிறந்திருக்க முடியாது என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

இளையராஜாவை தொட்டுத் தூக்கியவர் பஞ்சு அருணாச்சலம் : இயக்குநர் பாரதிராஜா பேச்சு !!

எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்ட பஞ்சு அருணாச்சலத்தின் 80வது ஆண்டு விழா தொடர்பாக பா.ஆர்ட் புரொடக்சன்ஸ் மற்றும் பிளாக் ஷீப் குழுவினர் இணைந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் கங்கை அமரன், தயாரிப்பாளர் ஆர்.கே. செல்வமணி, கலைப்புலி எஸ்.தாணு, சித்ரா லட்சுமணன், டி.ஜி தியாகராஜன், அன்புச் செழியன், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பூச்சி முருகன்,  உட்பட பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பஞ்சு அருணாச்சலத்தின் 80 வது ஆண்டு விழா தொடர்பாக லோகோவையும் வெளியிட்டனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய இசையமைப்பாளர் கங்கை அமரன், 

பஞ்சு அருணாச்சலம் இல்லை என்றால் எங்கள் பரம்பரை இல்லை. எங்கள் குடும்பத்துக்கு பிள்ளையார் சுழி போட்டவர் பஞ்சு அருணாச்சலம் தான் எனவும், சிறிய வயதில் இருந்தே என்னை பாடலமைக்க ஆர்வத்தை தூண்டியதும், இளையராஜா இசையமைக்க காரணமாக இருந்தவர் எனவும், பாரதிராஜா இருக்கும் போதே அவருக்கு விழா நடத்த வேண்டும். அதை பஞ்சு அருணாச்சலம் பார்த்து ஆசிர்வதிக்க வேண்டும் என்று கூறினார்.

எங்களை வளர்த்து தொட்டு தூக்கியவர் பஞ்சு அருணாச்சலம். சினிமாவில் இளையராஜாவை தொட்டு தூக்கியவர் பஞ்சு அருணாச்சலம். என்னை தொட்டு தூக்கியவர் பாரதிராஜா தான் என்று கூறினார்.
  
நிகழ்ச்சி மேடையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பூச்சி முருகன் பேசுகையில்,  தாமதமாக வந்ததற்கு எல்லோரும் மன்னிக்கவும்.‌ இது நல்ல தருணம். பஞ்சு அருணாச்சலத்துடன் எங்கள் அப்பா நெருக்கமாக இருந்தவர்.‌‌ கவிஞர் கண்ணதாசன் கதை சொல்ல பஞ்சு எழுதி கொண்டிருப்பாராம். ஒரு படத்தின் கதையை மாற்றி சிறந்த படைப்பாக கொடுப்பவர் பஞ்சு அருணாச்சலம் என்று சொல்வார்கள் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறி வந்தவர். 70 முதல் 90  காலங்கள் வரையான படங்களை பார்த்தால் அதில் பஞ்சு அருணாச்சலத்தின் பங்கு நிச்சயமாக இருக்கும். இளையராஜாவையே கொண்டு வந்தவர் பஞ்சு அருணாச்சலம் தான். பஞ்சு அருணாச்சலத்துக்கு எடுக்கும் விழாவிற்கு  இந்த குழு என்ன சொல்கிறதோ அதை தென்னிந்திய நடிகர் சங்கம் செய்து கொடுக்கும் என கூறினார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் பாரதிராஜா,

பஞ்சு அருணாச்சலம் - மென்மையான மனிதர். நான், இளையராஜா, கங்கை அமரன் ஆகிய எல்லாரும் அவரது வீட்டு உப்பை தின்று வளர்ந்தவர்கள் எனவும், காலில் விழுந்து வணங்க வேண்டிய மகா தெய்வம் பஞ்சு அருணாச்சலம். தவறு இருந்தால் திருத்தங்களை சொல்வார் பஞ்சு அருணாச்சலம். என் படங்கள் எல்லாம் அவரது பார்வையில் தான் இருக்கும்.‌

பஞ்சு அருணாச்சலத்துக்கு விழா எடுப்பது தமிழ் சினிமாவின் கடமை என்றும், ஊடகவியலாளர்களை பாராட்டுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பஞ்சு அருணாச்சலம் இல்லை என்றால் இசை ஞானி இளையராஜா பிறந்திருக்க முடியாது. தமிழ் திரையுலகம் ஒன்று சேர்ந்து பஞ்சு அருணாச்சலத்திற்கு பிரம்மாண்டமாக விழா எடுத்து மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறினார்.