எஸ்.ஜே சூர்யா வழக்கை எதிர்கொண்டே ஆகவேண்டும் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

வருமானவரித்துறை வழக்குகளை எதிர்த்து இயக்குநரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம், வழக்குகளை எதிர்கொள்ள உத்தரவிட்டுள்ளது ...

எஸ்.ஜே சூர்யா வழக்கை எதிர்கொண்டே ஆகவேண்டும் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

கடந்த 2002ம் ஆண்டு முதல் குறிப்பிட்ட 6 ஆண்டுகள் எஸ்.ஜே சூர்யா  வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி வருமான வரியாக 7 கோடியே 57 லட்ச ரூபாய் செலுத்துமாறு வருமான வரித்துறை சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதை எதிர்து எஸ்ஜே சூர்யா தாக்கல் செய்த மனுக்களை வருமான வரி தீர்ப்பாயம் தள்ளுபடி செய்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் எஸ்ஜே சூர்யா மனுத்தாக்கல் செய்தார்.

அதில், குறிப்பிட்ட நிதியாண்டுகளின் வரிக்கணக்குகள் மறுமதிப்பீடு நடைமுறைகள் நிலுவையில் உள்ள நிலையில்,  இவ்வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவற்றை ரத்து செய்யுமாறு எஸ்ஜே சூர்யா தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாததால் எஸ்.ஜே சூர்யா இவ்வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

வருமானவரித் துறையின் விசாரணையும், குற்ற வழக்கு விசாரணையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, மறுமதிப்பீடு நடவடிக்கை என்பது, குற்ற வழக்கு தொடர்வதற்கு எந்த விதத்திலும் தடையாக இல்லை எனவும் குறிப்பிட்டார்.