துன்பங்களுக்கு மருந்தாய்..! இன்பங்களுக்கு விருந்தாய்...! என்றும் இசைஞானி...!

இசையுலகின் மேஸ்ட்ரோ என புகழப்படும் இளையராஜா இன்று 80-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இன்பம், துன்பம், தனிமை, அழுகை, பிரிவு, இறப்பு, ஞானம் என ஒரு மனிதனின் அத்தனை சூழ்நிலைக்குமே பொருந்திப் போகிறது இளையராஜாவின் இசை.
1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளியில் தொடங்கி சமீபத்தில் வெளியான விடுதலை வரையிலும் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு இசையமைத்து, 7 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை வழங்கி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனிப்பெரும் ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளார் ராஜா. 1943 ஜூன் 2-ம் தேதியன்று ஞானதேசிகனாக பிறந்தவர், டேனியல் ராசையாவாக மாறி தமிழ் மக்கள் மத்தியில் இளையராஜா எனும் அடையாளத்தோடு மக்கள் மனதில் மாபெரும் அரியணையிட்டு அமர்ந்துள்ளார்.
இளையராஜாவை தமிழ் சினிமா மட்டுமல்ல; இந்திய சினிமாவே கொண்டாடி வருகிறது. இசையுலகில் சாதிக்க வேண்டும் என லட்சிய வெறியோடு சென்னை பட்டணத்தை அடைந்தவருக்கு பணமோ, பழக்கமோ எதுவும் கைகொடுக்கவில்லை. திறமையால் உயர்ந்தவருக்கு உதிரத்திலேயே செருக்கு ஏற்படலாம். அந்த செருக்கு கூட சிலருக்கு மட்டுமே பொருத்தமாய் இருந்திருக்கலாம். ஜல்லிக்கட்டு காளையின் கூர்மிகு கொம்பு போல.
இளமைப் பருவத்தில் மனதில் பூத்த காதலை சொல்லவே தயங்கிய பலருக்கும் தூது சென்றது இளையராஜாவின் பாடல்கள். ஆழ்மனதின் வேர்களில் உள்ள அடிநாதத்தில் உள்ள பசுமையான காதலை வெளியே சொல்லின இளையராஜாவின் பாடல்கள். இன்றைய சூழ்நிலையில் திரையுலகில் எத்தனையோ மியூசிக் கம்போசர்கள் இதுதான் இசை என ரசிகர்களின் ரசனையை மாற்றி வருவதுண்டு. ஆனால் இளையராஜா ஒரு கம்போசராக அல்லாமல் தன்னை மேஸ்ட்ரோவாகவே நிலைநாட்டியுள்ளார்.
இசையுலகில் அறிமுகமாகி 50 ஆண்டுகளாகியும் தலை சிறந்த இசையமைப்பாளராக தரணியாண்ட ராஜாவுக்கு இன்று 80-வது பிறந்தநாள். தன் வாழ்நாளில் ஏற்றம் ஒன்றையே கண்டு வந்த இசைஞானிக்கு திரைத்துறையினர் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | ”இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்தும் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள்” அரசியல் தலைவர்கள் வாழ்த்து!