20 ஆண்டு திரைப்பயணத்தை குறித்து ’வாத்தி’ படக்குழுவினர் வெளியிட்ட மாஸ் போஸ்டர்: இணையத்தில் வைரல்!

நடிகர் தனுஷின் 20 ஆண்டு திரைப்பயணத்தை குறிப்பிடும் வகையில் ‘வாத்தி’ படக்குழுவினர் வெளியிட்டுள்ள மாஸ் போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

20 ஆண்டு திரைப்பயணத்தை குறித்து ’வாத்தி’ படக்குழுவினர் வெளியிட்ட மாஸ் போஸ்டர்: இணையத்தில் வைரல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் தனது திரையுலக பயணத்தில் 20 வருடத்தை சிறப்பாக கடந்து உள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “துள்ளுவதோ இளமை” திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தனுஷிற்கு முதலில் வரவேற்பு இல்லை என்றாலும், அடுத்தடுத்து தன் நடிப்பாலும் திறமையாலும் நானும் ஒரு நடிகர் தான் என்பதை எல்லோர் மனதில் நிறுத்தி படிபடியாக முன்னேறியுள்ளார்.

தற்போது தமிழ் சினிமா போற்றும் முன்னணி ஹீரோவாக உள்ளார். அதுமட்டுமின்றி இந்த இருபது ஆண்டுகளில் நடிகராக மட்டுமில்லாமல், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களில் ஜொலித்து வருகிறார். மேலும் நேற்று தனது 20 ஆண்டு திரையுலக பயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றையும் அவர் செய்திருந்தார்.

இந்நிலையில் தனுஷின் 20 ஆண்டு திரைப்பயணத்தை போற்றும் விதமாக, தற்போது தனுஷ் நடித்து வரும் ‘வாத்தி” திரைப்படத்தின் படக்குழுவினர் மாஸ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் தனுசின் ’துள்ளுவதோ இளமை’ தோற்றம் மற்றும் ’வாத்தி’ தோற்றம் ஆகிய இரண்டையும் சேர்த்து விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகி வரும் ‘வாத்தி’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.