பன்முக திறமையாளர் மனோபாலா மறைவு - தலைவர்கள் இரங்கல்!

பன்முக திறமையாளர் மனோபாலா மறைவு - தலைவர்கள் இரங்கல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான மனோபாலா மறைவையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர் மனோபலா. 69 வயதான இவர், மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான திரு. மனோபாலா உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என கூறியுள்ளார். மனோபாலாவை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள்  என அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கல்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நடிகர் மனோபாலா உடல்நிலை குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன் என கூறியுள்ளார். கழகத்தின் மீது தீவிர பற்று கொண்டிருந்தவரும், தலைமை கழக பேச்சாளருமான மனோ பாலாவை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தனது அன்பு நண்பர், இயக்குநர், நடிகர் என பன்முக திறமை கொண்ட மனோபாலா காலாமானார் என்ற செய்தி கேட்டு, அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன் என குறிப்பிட்டுள்ளார். திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது எனவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ மூலம் மனோபாலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், ''என் மீது மரியாதையும் மதிப்பும் வைத்திருந்த நண்பர், நடிகர், இயக்குநர் மனோபாலா காலமான செய்திகேட்டு மிகவும் துயருற்றேன். மனோபாலா ஆரம்பத்தில் பத்திரிகையாளராகவும், பின்னர் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராகவும் பணிபுரிந்து பின்னர் டைரக்டரானார்” என பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.

இதேபோல், மனோபாலா மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா வீடியோ வெளியிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், “என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.” எனப் பதிவிட்டுள்ளார்.