என்னது ’மாமன்னன்’ தான் கடைசி படமா? - உதயநிதியின் அதிர்ச்சி பேட்டி

’மாமன்னன்’ தான் எனது கடைசி படமாக இருக்கும் என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்னது ’மாமன்னன்’ தான் கடைசி படமா? - உதயநிதியின் அதிர்ச்சி பேட்டி

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலின், நடிப்பு மட்டுமில்லாமல் அரசியலிலும் களமிறங்கி தன்னுடைய ஈடுபாட்டை வெளிபடுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்திற்குரிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இவர் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் வருகிற 20 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘மாமன்னன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். நடிகை கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக தகவலும் வெளியானது.

இந்நிலையில் பிரபல தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த உதயநிதி ஸ்டாலின், ’மாமன்னன்’ படம் தான் அனேகமாக எனது கடைசி படமாக இருக்கலாம் என்றும், சினிமாவை விட அரசியலில் அதிக ஆர்வம் இருப்பதாகவும், அரசியலில் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் இருப்பதாகவும், 100% அரசியலில் கவனம் செலுத்துவதற்காகவும், அரசியலை இன்னும் அதிகம் கற்று கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சினிமாத்துறை பற்றிய இந்த முடிவு உதயநிதியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அவரது சேவை தமிழ் நாட்டுக்கு தேவை என்ற வகையில் அவரது முடிவு சரியாகவே இருக்கும் என திமுக தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.