வழக்கை வாபஸ் பெறும் லைகா நிறுவனம்.?

வழக்கை வாபஸ் பெறும் லைகா நிறுவனம்.?

லைகா நிறுவனர் சுபாஷ்கரன் மற்றும் இயக்குனர் ஷங்கர் இருவரும் சந்தித்துப் பேசி இந்தியன் 2 பட சிக்கல் தீர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்குனர் ஷங்கர்- கமல் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்தது. படம் ஆரம்பித்தது முதலாகவே மெதுவாகத் தான் நகர்ந்து வந்தது. இதற்கிடையில் சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக படக்குழுவினருக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டது. அதன் காரணமாக படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பின்னர் கொரோனா ஊரடங்கு, கமல் அரசியல் பிரவேசம் உள்ளிட்ட காரணங்களால் இன்றுவரை படப்பிடிப்பு துவங்கப்படாமலே இருந்து வருகிறது. படத்தின் 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு மேல் இந்தியன் 2 மேல் நம்பிக்கையில்லாத ஷங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து புதிய படம் ஒன்றை அறிவித்தார்.

பின்னர் ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படங்களை இயக்கக்கூடாது என லைக்கா வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இருதரப்பும் பேசி பிரச்சினையை முடித்துக்கொள்ள அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது தீர்வு எட்டவில்லை. 

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் இருக்கும் லைகா நிறுவனர் சுபாஷ்கரன் நேற்று பெங்களூரில் இருந்து சென்னை வந்துள்ளார். நேற்று இரவு சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் சுபாஸ்கரன், ஷங்கர் மற்றும் இருவரின் மனைவிகள் என நான்கு பேர் மட்டுமே சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்தியன் 2 பட சிக்கல் தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதையடுத்து தான் தற்போது இயக்கி வரும் தெலுங்கு படம் முடிந்ததும் இந்தியன்-2 படிப்பை மீண்டும் தொடங்குவதாக ஷங்கர் உறுதியளித்துள்ளார். எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கை நாளை வாபஸ் பெற இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியன் 2 படத்தின் சிக்கல் தீர்ந்தது உறுதியாகியுள்ளது.