லியோ டிரைலர் சர்ச்சை; இந்துத்துவ அமைப்பு போலீசில் புகார்!

லியோ பட ட்ரெய்லரில் நடிகர் விஜய் ஆபாச வார்த்தை பேசியதை கண்டித்து அகில பாரத் இந்து மகா சபா சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விஜய் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லியோ’. இந்தத்திரைப்படத்தில் பல வருடங்களுக்கு பிறகு, விஜயுடன் ஜோடியாக சேர்ந்து இருக்கிறார் நடிகை த்ரிஷா.

இவர்களுடன் நடிகர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது. இந்தப்படத்தில் இருந்து வெளியான போஸ்டர், புரமோ வீடியோ, பாடல்கள் உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று முன் தினம் மாலை 6.30 மணியளவில், படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

இந்த ட்ரெய்லர் ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வந்தாலும், ட்ரெய்லரின் நடுவில் நடிகர் விஜய் ஆபாச வார்த்தை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு நாயகன், அனைவரின் கவனமும் பெற்ற ஒரு திரைப்படத்தின் ட்ரெய்லரில் இப்படி பேசியது தவறு என்று கூறி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. 

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோரை சரமாரியாக வழக்கம்போல சிலர் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் களம் கண்டுள்ளதால் சமூக வலைத்தளங்களில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் லியோ படக்குழு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அகில பாரத் இந்து மகா சபா சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  அதில், “பட டிரெய்லரில் இடம்பெற்ற ஆபாச வார்த்தையை நீக்கக்கோரியும், டிரெய்லரை தணிக்கை செய்யாமல் யூடியூபில் வெளியிட்ட படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும்  நடிகர் விஜய் ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக செயல்படாமல் ஆபாச வார்த்தையை பயன்படுத்தினால், இவை நிஜ வாழ்க்கையில் எதிரொலிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஆசிய விளையாட்டில் பதக்கத்தில் சதமடித்த இந்தியா...!