லெஜெண்ட் சரவணா படத்தில் நடிகர் விவேக்..! டெக்னாலஜி மூலம் மீண்டும் திரையில் கொண்டு வர படக்குழு முயற்சி..!

இறந்தவரை கண்முன் காட்டத் துடிக்கும் படக்குழு..!

லெஜெண்ட் சரவணா படத்தில் நடிகர் விவேக்..! டெக்னாலஜி மூலம் மீண்டும் திரையில் கொண்டு வர படக்குழு முயற்சி..!

சின்னக் கலைவாணர் என அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக். திரையில் நகைச்சுவையையும் தாண்டி, சமூக கருத்துக்களை பேசி, சிந்திக்கவும் வைத்தவர் விவேக். மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர், அவரது அறிவுறுத்தலின் பேரில், லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார். 

கொரோனா காலகட்டத்தில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கம் காட்டியப் போது, தைரியமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டதோடு, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஆனால் துர்திஷ்டவசமாக கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி திடீர் மாரடைப்பால் நடிகர் விவேக் காலமானார். விவேக்கின் திடீர் மரணம் அவர்களது ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்தது. இன்று வரையிலும் அவரது மரணத்தை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாமலையே உள்ளது. 

இறப்பதற்கு முன்பு பிசியாக பல படங்களில் நடித்து வந்தார் விவேக். குறிப்பாக தனது திரையுலகில் பல்வேறு ஹீரோக்களுடன் நடித்தவர் கமலுடன் மட்டும் நடிக்கவே இல்லை. இந்தக் குறையை போக்கும் விதமாக கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில், போலிஸ் அதிகாரியாக நடித்து வந்தார் விவேக். இருப்பினும் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் பாதியிலேயே நின்ற நிலையில், தற்போது விவேக்கும் இல்லாததால், அவர் நடித்த காட்சிகளை வேறொருவரை வைத்து எடுக்க படக்குழு திட்டமிட்டது. அதேபோல, கடைசியாக அவர் நடித்து வந்தப் படம் லெஜண்ட் சரவணா நடிப்பில் உருவாகி வந்த பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில். 

லெஜண்ட் சரவணாவின் தோழனாக அந்தப் படம் முழுக்கவே விவேக் நடித்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், விவேக் நடிக்கவிருக்கும் காட்சிகளில் விவேக் போலவே தோற்றமுடைய நபரை நடிக்க வைத்து பிறகு டெக்னாலஜி மூலம் மார்ஃபிங் செய்து நடிகர் விவேக்கை மீண்டும் திரையில் கொண்டு வருவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விவேக்கின் உழைப்பை வீணாக்காமல், அதே சமயம் தொழில்நுட்ப யுத்திகளை பயன்படுத்தி மீண்டும் விவேக்கின் நடிப்பை பார்க்க வைக்க உள்ள படக்குழுவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.