கூப்டு வெச்சு அசிங்கபடுத்திட்டாங்க...கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்!

கூப்டு வெச்சு அசிங்கபடுத்திட்டாங்க...கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்!

கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற தமிழ்நாடு அரசு திரைப்பட விழாவில் தன்னை நீண்ட நேரம் காக்க வைத்து விட்டு, விருதும் தராமல் அனுப்பியது மிகுந்த 
வேதனையளிப்பதாக நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

13 வருடங்களுக்கு பிறகு:

கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும், தமிழ் சினிமாவில், சிறந்த படைப்புகளை தந்த சினிமா கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் விருதுகளும், ரொக்கப்பரிசும், தங்க பதக்கங்களும் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2008-ம் ஆண்டுக்கு பிறகு இந்த தமிழ்நாடு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. 

2009 - 2014-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருது:

இந்த நிலையில், 2009 முதல் 2014-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், 
மா.சுப்பிரமணியன், எம்பி தயாநிதி மாறன், சென்னை மேயர் பிரியா என பல அரசு பிரதிநிதிகளும், மற்றும் நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டனர். 

மறைந்த இயக்குநர்களுக்கு விருது:

விழாவில் மறைந்த இயக்குநர்களான கே.வி.ஆனந்த், ராசுமதுரவன் ஆகியோரின் அயன் மற்றும் மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. 
மறைந்த இயக்குநர்களின் குடும்பத்தார் மற்றும் அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் பெற்றுக் கொண்டனர். உடனுக்குடனேயே விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று 
இருந்தால், அவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் என பலரும் தங்களது வருத்தங்களை தெரிவித்திருந்தனர். 

சிறு வயதில் நடித்த படங்களுக்கு விருது:

அதேபோல, பல நடிகர்கள் சிறு வயதில் நடித்த படங்களுக்கு 12 வருடங்களுக்கு பிறகு விருதுகள் வழங்கப்பட்டது பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. உதாரணத்திற்கு 2009-ம் ஆண்டு வெளியான பசங்க படத்தில் சிறுவனாக நடித்திருந்த ஸ்ரீராம் மற்றும் கிஷோர் ஆகியோர் இளைஞர்களாக வந்து விருதினை பெற்றுக் கொண்டனர். அதேபோல 2012-ம் ஆண்டு மெரினா படத்தில் நடித்திருந்த சிவகார்த்திகேயனுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார் என்பது 
குறிப்பிடத்தக்கது. 

சீரியலுக்கான விருதுகள்:

திரைப்படங்களையும் தாண்டி, சீரியல் நடிகர், நடிகைகள், இயக்குநர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. அதன் படி திருமதி செல்வம், வாணிராணி, இருமலர்கள் என பல 
சீரியல்களுக்கும் இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.  

உச்சிதனை முகர்ந்தால்:

அதேபோல 2011-ம் ஆண்டுக்கான சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதினை உச்சிதனை முகர்ந்தால் என்ற படத்தில் நடித்தமைக்காக லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விருதினை பெறுவதற்காக மாலை 
5 மணிக்கு கலைவாணர் அரங்கம் வந்த அவர், கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தார். 2011-ம் ஆண்டு விருது பட்டியல் வாசிக்கப்பட்ட போது, அதில் லட்சுமி ராமகிருஷ்ணனின் பெயர் விடுப்பட்டிருந்தது. இதனால் மிகுந்த கோபமடைந்த அவர், மக்கள் தொடர்பு அதிகாரிகளிடம்(pro) சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். 

லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி?:

தன்னை வரவழைத்து அசிங்கப்படுத்தியது ஏன்? என கேள்விகளை எழுப்பினார். அவரை சமாதானப்படுத்திய அதிகாரிகள், விடுபட்டிருந்த விருதினை அவருக்கு வழங்கி அனுப்பி 
வைத்தனர். இதனையடுத்து, விழா சிறப்பாக இருந்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்து விட்டு சென்றார். ஆனால் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் காக்க வைக்கப்பட்டதையும், பெயர் விடுபட்டத்தையும் குறிப்பிட்டு பதிவு ஒன்றையும் பகிர்ந்திருந்தார். என்னம்மா இப்படி பன்னீட்டாங்களேமா....