பாடி ஷேமிங் செய்கிறாரா ரன்பீர் ...? கொந்தளிக்கும் ரசிகர்கள்...!

பாடி ஷேமிங் செய்கிறாரா ரன்பீர் ...? கொந்தளிக்கும் ரசிகர்கள்...!

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், தனது கர்பிணி மனைவியான ஆலியா பட்டுடன், ரசிகர்களிடம் உரையாடிக்கொண்டிருந்த லைவில், ஆலியா பட்டின் பேபி பம்ப் பற்றி ரன்பீரின் நகைச்சுவை பேச்சு பெரும் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து, ஆலியாவை உருவ கேலி செய்தது தவறு என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களது திருமணம் கடந்த ஏப்ரல் 14 ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இவர்கள் இணைந்தது பிரம்மாஸ்திரா படம் மூலமாக தான். ரன்பீர் கபூர், ஆலியா பட்டுடன், நாகார்ஜுனா, மௌனி ராய், அமிதாப் பச்சன் ஆகியோர் இணைத்து நடித்துள்ள பிரம்மாஸ்திரா திரைப்படம் 3 பாகங்களாக வெளியாக உள்ளது. அயன் முகர்ஜீ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற செப் 9 ம் தேதி வெளியாக உள்ளது. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.  

படத்தின் ட்ரைலர் கடந்த ஜூன் 15 ம் தேதி வெளியானது. புராணங்களையும், இதிகாசங்களையும் மையமாகக் கொண்ட இந்த ஃபேண்டசி படத்தின் ட்ரெயிலரில் வரும் VFX காட்சிகள், பார்ப்பவர்களையும் கவரும் வண்ணம் அதிர வைக்கின்றன. சிவா எனும் கதாபாத்திரத்தில் ரன்பீரும், ஈஷா எனும் கதாபாத்திரத்தில் ஆலியாவும் நடித்துள்ளனர்.  

திருமணத்தை தொடர்ந்து, இருவருமே படப்பிடிப்புகளில் பிஸியாகினர். இந்நிலையில், ரன்பீர் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில், விரைவில் "எங்கள் குழந்தை" என கேப்ஷனிட்டு, மகிழ்ச்சியாக ஆலியா, தாயாக போவதை உறுதிப்படுத்தினார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும், ஒரு சிலர் கலவையான விமர்சனங்களையும் கொடுத்திருந்தனர். திருமணமாகி இரண்டு மாதங்களிலேயே 5 மாத கர்பமா என்றெல்லாம் கேள்வி எழுப்பிய நிலையில், ஆலியா வின் ரசிகர்களே அவருக்கு ஆதரவாக பதில் பதிவிட்டது இணையத்தில் பெரும் போர்க்களம் மூண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த வியாழன் அன்று, அவர்கள் நடித்த பிரம்மாஸ்திரா திரைப்படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக, இருவரும் சேர்ந்து சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் நேரடி கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அப்போது நடிகர் ரன்பீர், ஆலியாவின் பேபி பம்ப்பையும், உடல் எடையையும் பார்த்து, எதார்த்தமாக கேலி செய்துள்ளார். அவரின் அந்த நகைச்சுவை உணர்வு, சர்ச்சைக்கு உள்ளாகியது. இதனை பார்த்த நெட்டிசன்கள், ரன்பீரின் இந்த பேச்சு வெறுக்கத்தக்கது என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.  

அந்த உரையாடலில், ரன்பீரும் ஆலியாவும் ஏன் தங்கள் பிரம்மாஸ்திரா படத்தை பெரிதாக விளம்பரப்படுத்துவதில்லை என்று விவாதித்தனர். அப்போது, அலியா “நாங்கள் படத்தை விரிவாக விளம்பரப்படுத்துவோம்” என கூறிக்கொண்டிருக்கும் போது, ரன்பீர் ஆலியாவின் பேபி பம்பை பார்த்தபடி, “சரி, யாரோ ஒருவர் பெருத்துக்கொண்டே இருப்பதை நான் காண்கிறேன்” என்றார். இதனால் வாயடைத்துப்போன ஆலியாவை ரன்பீர்  முதுகில் தட்டிக் கொடுத்து, “ஜோக்” என்று கூறுகிறார். ரன்பீர் நகைச்சுவையாக இதனை கூறியிருந்தாலும் நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். ஒரு தாய்மையை இப்படியா கொச்சைப்படுத்துவது என கூறி வருகின்றனர்.