”தளபதி 66” படத்தில் சரத்குமார் கேரக்டர் குறித்த தகவல் கசிவு..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் “தளபதி 66” படத்தில் நடிகர் சரத்குமார் கேரக்டர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

”தளபதி 66” படத்தில் சரத்குமார் கேரக்டர் குறித்த தகவல் கசிவு..!

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. என்னதான் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு ”பீஸ்ட்” படம் விருந்தாக தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றே சொல்லலாம். தற்போது வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு,  தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் “தளபதி 66” படம் குறித்த தகவல் வெளியாகி கூடுதல் மகிழ்வினை அளித்திருக்கிறது.

தளபதி அடுத்ததாக நடிக்கவிருக்கும் “தளபதி 66” படத்தின் பூஜை முடிந்து, படப்பிடிப்பும் தொடங்கியது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். இயக்குனர் வம்சி இயக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். அதுமட்டுமில்லாமல் தில் ராஜுவின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் ’தளபதி 66’ படத்தில் சரத்குமார் கேரக்டர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்தில் விஜய்யின் தந்தை கேரக்டரில் சரத்குமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது சரத்குமாருக்கு மூன்று மகன்கள் என்றும் அவர்களில் ஒருவர்தான் விஜய் என்றும் விஜய்யின் இரண்டு அண்ணன்கள் கேரக்டரில் நடிக்க 90களில் பிரபலமான ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.