”தாலி கட்டுனாதா காதல தொடர முடியும்னா அவ்வளவு தானா காதலோட மதிப்பு”? வெளியான பா.ரஞ்சித்தின் அடுத்த பட டிரைலர்..!

இயல்பான காதலும், அதனை சுற்றி சமூகம் உருவாக்கும் கதைகளும் = நட்சத்திரம் நகர்கிறது..!

”தாலி கட்டுனாதா காதல தொடர முடியும்னா அவ்வளவு தானா காதலோட மதிப்பு”?  வெளியான பா.ரஞ்சித்தின் அடுத்த பட டிரைலர்..!

பா.ரஞ்சித்: தமிழ் சினிமாவை பொருத்தவரையிலும், ஒரு காலகட்டத்துல கிராமங்களில் உண்மையாக நடந்து கொண்டிருந்த சம்பவங்களையும், சாதிய பாகுபாடுகளையும் அப்படியே படமாக்கி கொண்டிருந்தனர். ஆனால் இவர்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? ஏன் தாழ்த்தப்படும் மக்களின் வாழ்க்கையை யாருமே இங்கு கூறுவதில்லை என சிந்தித்து அதனை வரிசையாக படமாக கொடுத்து வருபவர் பா.ரஞ்சித். 

கவனிக்கப்பட்ட படங்கள்: மெட்ராஸ், கபாலி, காலா, சர்பட்டா பரம்பரை என வரிசையாக சினிமாவில் கவனிக்கப்பட்ட படங்களை கொடுத்தவர். ஒரு மனிதனின் வாழ்வில் ஏற்றத் தாழ்வும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் தனது படங்கள் மூலம் வெளிச்சம் போட்டு காட்டி வருபவர் ரஞ்சித். அதனாலேயே இவரது படங்கள் இளைஞர்களுக்கும், முற்போக்குவாதிகளுக்கும் மிகவும் பிடிக்கும். 

தயாரிப்பு நிறுவனம்: இயக்கத்தோடு மட்டும் நிற்காமல் தன்னைப் போன்ற படைப்பாளிகளின் படங்களை தயாரிக்கவும் ஆரம்பித்தார் பா.ரஞ்சித். நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ்  மூலம் பரியேறும் பெருமாள், குதிரைவால், ரைட்டர் போன்ற பல படங்களை தயாரித்தும் வருகிறார் பா.ரஞ்சித். 

நட்சத்திரம் நகர்கிறது: இந்த நிலையில், அவரது அடுத்த படைப்பாக உருவாகியிருக்கும் திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராமன், டான்சிங் ரோஸ் ஷபீர் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 

டிரைலர் வெளியீடு: இம்மாதம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தின் டிரைலர் எவ்வித ஆராவாரமும் இன்றி அமைதியான முறையில் வெளியாகி இருக்கிறது. காதலுக்கு பின்னால் இந்த சமூகம் உருவாக்கும் கதைகள் என்ற தலைப்பின்  கீழ் இந்த டிரைலர் வெளியாகியுள்ளது. 

விமர்சனம்: பொதுவாகவே பா.ரஞ்சித்தின் கதை என்றாலே தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் அதில் நிச்சயம் இருக்கும் என்ற பார்வை தான் இதுநாள் வரை இருந்து வந்தது. ஆனால் இந்த டிரைலர் அந்தக் கோணத்தில் இருந்து சற்று மாறுபட்டுள்ளது. காதலையும், அதனை சுற்றி நடக்கும் கதைகளையும் கூறும் விதமாக உள்ளது டிரைலர். மேடை நாடகங்களை நடத்தும் ஒரு கும்பலும், அந்த கும்பலுக்குள் இருக்கும் மாறுபட்ட காதல் கதைகளும், அந்த காதலை சுற்றி சமூகம் கட்டமைக்கும் கதைகளையும் பற்றி கூறுகிறது நட்சத்திரம் நகர்கிறது படத்தின் டிரைலர். 

தீப்பறக்கும் வசனங்கள்: பெண்ணும் பெண்ணும், ஆணும் ஆணும் காதல் பன்னக் கூடாதா? தாலி கட்டுனா மட்டும் தான் காதல் தொடரும்னா? அவ்வளவு தானா அதன் மதிப்பு? காதல்ல எங்க வயசு வந்துச்சு? இப்படி பல வசனங்கள் டிரைலரில் வந்து செல்வது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருக்கிறது.