இந்த விருதை என் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கு சமர்ப்பிக்கிறேன்; தேசிய விருது பெற்ற சூரியா நெகிழ்ச்சி:

இன்று பிறந்தநாள் காணும் நடிகர் சூரியா, தேசிய விருது பெற்ற நிலையில், தனது விருதை, தனது குழந்தைகளுக்கும், அன்பு குடும்பத்திற்கும் கொடுக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விருதை என் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கு சமர்ப்பிக்கிறேன்; தேசிய விருது பெற்ற சூரியா நெகிழ்ச்சி:

நேற்று, திரைப்படங்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல தென்னிந்திய படங்கள் விருதுகள் பெற்றன. அதிலும், 2020ம் ஆண்டின் சிறந்த படம் உட்பட ஐந்து விருதுகளைத் தட்டிச் சென்றது சூரரைப் போற்று.

சூரியா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி நடித்த இந்த படத்தை, சுதா கொங்காரா இயக்கி, 2டி நிறுவனம் தயாரித்தி வெளியிட்டது. ஹாட்ஸ்டார் என்ற ஓடிடி தளத்தில் வெளியான இந்த படமானது, உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

டெக்கன் என்ற விமான நிறுவனத்தின் நிறுவனரான கோபிநாத்-தின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட, சூரரைப் போற்று படம், அனைவரது கவனத்தையும் பெற்றது. பாமர மக்களுக்கும் விமான பயணத்தின் அனுபவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ராணுவ வீரர் ஒருவர் விமான நிறுவனம் தொடங்கி, அதில் பயணிக்க வெறும் 1 ரூபாய் மட்டுமே கட்டணம் செலுத்தும் வகையில் உருவாக்குகிறார். அது வெற்றி அடைகிறதா இல்லையா என்பது தான் கதையின் கருவே. இந்த கதையில் மாறன் என்ற கதாபாத்திரத்தில் சூரியாவும், பொம்மி கதாபாத்திரத்தில் அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.

கொரோனா காரணமாக தியேட்டர்களில் வெளியாகாமல், ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், படம் தியேட்டர்களில் வெளியாகவில்லை என்ற வருத்தம், ரசிகர்களுக்கு இருந்தது. அதனைத் தீர்க்க, படத்தின் இந்தி ரீமேக், அக்‌ஷய் குமார் நடிப்பில், சுதா கொங்காரா இயக்கத்திலேயே உருவாகி வருகிறது. மேலும், படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, படம் ஆஸ்கார் நாமினேஷன்களுக்கு தேர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், 2020ம் ஆண்டின் திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட போது, ஐந்து விருதுகளை சூரரைப் போற்று படம் அள்ளியுள்ளது.

சிறந்த நடிகர்: சூரியா

சிறந்த நடிகை: அபர்ணா பாலமுரளி

சிறந்த படம்: சூரரைப் போற்று

சிறந்த பின்னணி இசை (BGM): ஜி வி பிரகாஷ்

சிறந்த திரைக்கதை: சூரரைப் போற்று- ஷாலினி உஷா

இந்த ஐந்து விருதுகளையும் கொண்டாடும் வகையில், நேற்று, இயக்குனர் சுதா கொங்காரா கேக் வெட்டி அதன் போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட போது, அதில், “மாறா நாம ஜெயிச்சிட்டோம்” என்று எழுதியிருந்தார். அதுவும் படு வைரலானது.

இன்று பிறந்தநாள் காணும் நடிகர் சூரியா, தனக்குக் கிடைத்த விருதை நினைத்து பெருமிதம் கொண்டார். மேலும், தனக்குக் கிடைத்த விருதை, தனது குழந்தைகள் மற்றும் தனது அன்பார்ந்த குடும்பத்திற்கு வழங்க விரும்புவதாக தற்போது கூறியுள்ளார். 

எப்பொழுதும், தனது பிறந்தநாளுக்கு முன்பு அறிக்கை விடும் சூரியா, இப்பொழுதும் ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தன்னுடன் தேசிய விருதைப் பெற்ற, தனது படக்குழுவினருக்கும், மற்ற படைப்பாளர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, தன்னை நம்பி அறிமுகப்படுத்திய நேருக்கு நேர் படத்தின் இயக்குனர் வசந்த சாய்-க்கும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மணிரத்னம் -க்கும் நன்றி தெரிவித்தார். மேலும், எழுதிய அவர், “அன்பும், வழிக்காட்டலும் தந்து, எப்போதும் துணைநிற்கும் அம்மா, அப்பா, கார்த்தி, பிருந்தா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் என்னை வலியுறுத்திய என் ஜோதிகாவிற்கும், அன்பு பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோருக்கும், இந்த விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன்” என்று எழுதியிருந்தார்.

பிறந்தநாளுக்கன மிகச் சிறந்த பரிசு பெற்ற நடிகர் சூரியாவின் இந்த தன்னடக்கத்தைப் பலரும் பாராட்டி, பிறந்தநாளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.