பிரம்மாஸ்திரா படத்துக்காக மாற்றப்பட்டதா தேசிய சினிமா தினம்...?

பிரம்மாஸ்திரா படத்துக்காக மாற்றப்பட்டதா தேசிய சினிமா தினம்...?

ஒவ்வொரு ஆண்டும் தேசிய சினிமா தினம் கொண்டாடப்பட்டு, அந்த நாளில் திரையரங்குகளில் பல சலுகைகளை வழங்குவது வழக்கம். அந்த வகையில், இந்திய மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள் சங்கம் வரும் 16 ஆம் தேதி தேசிய சினிமா தினமாக அறிவித்திருந்தது. அந்த தினத்தன்று சுமார் 4000 திரையரங்குகளில் சினிமா டிக்கெட் விலையானது ரூ. 75 க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என இந்திய மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் முன்னதாகவே தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இந்த தேசிய சினிமா தினமானது, செப்டம்பர் 16 ஆம் தேதியிலிருந்து 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 16 ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்த தினங்களில் நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு, அருண் விஜயின் சினம் போன்ற படங்கள் வெளியாகின்றன. 

அது மட்டுமில்லாமல் பாலிவுட்டில் ரன்பீர் கபூர் - ஆலியா பட் நடிப்பில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது பிரம்மாஸ்திரா திரைப்படம். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படங்களின் வசூல் பாதிக்கப்படும் என்பதால் இந்திய மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள் சங்கத்தின் இந்த தேசிய சினிமா தினத்தை திரைப்பட விநியோகரஸ்தர்கள் ஏற்கவில்லை. அதனால் தான் இந்த தேதியானது செப்டம்பர் 16 ஆம் தேதியிலிருந்து 23 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படமும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.