உலகின் தலைசிறந்த பாடகர்களுடன் போட்டி போட்டு, ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருது வென்றுள்ளது.
நாட்டு நாட்டு பாடல்:
ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ஆர்.ஆர்ஆர். இப்படத்தில் எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்த நாட்டு நாட்டு பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுக்கு, கங்குபாய், காந்தாரா, செல்லோ ஷோ உள்ளிட்ட படங்கள் முன்மொழியப்பட்ட நிலையில், ஆர்ஆர்ஆர் திரைப்படம் மட்டுமே நாமினேஷனில் இடம்பெற்றது. தொடர்ந்து நாட்டு நாட்டு பாடலுக்காக கோல்டன் குளோப் அறிவிக்கப்பட்டதையடுத்து, படக்குழுவினரின் ஆரவாரத்துடன் இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி விருதை பெற்றுக் கொண்டார்.
படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்:
இதனையடுத்து படக்குழுவினருக்கு, இசையமைப்பாளர் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் மம்மூட்டி, ஷேகர் கபூர், மகேஷ் பாபு, விஜய் தேவர் கொண்டா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து "நாட்டு நாட்டு பாடலை எழுதிய, பாடல் ஆசிரியர் சந்திரபோஸ், படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதேபோல், படத்தின் இயக்குநர் ராஜமவுலி, படத்தில் நடித்த ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோரும் தங்களது மகிழ்வை வெளிப்படுத்தினர்.
சிறந்த பாடல்களுடன் போட்டி :
இந்த ”நாட்டு நாட்டு” பாடல், டெய்லர் ஸ்விப்ட் பாடிய “கரோலினா”, கில்லர்மோ டெல் டோரோ பாடிய "சியோ பாபா", லேடி காகா பாடிய "கோல்டு மை கேன்டு", ரிஹானாவின் wakanda forever ஆகிய பாடல்களுடன் போட்டி போட்டு இந்த விருதை பெற்றுள்ளது. இப்போட்டியாளர்களுக்கு உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.