வெளியானது கார்கி ட்ரெயிலர்; சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டுகள்:

மலர் கதாபாத்திரத்தில் மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிய சாய் பல்லவி, தற்போது கார்கி படத்தில் நடித்து வருகிறார். அதன் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது.

வெளியானது கார்கி ட்ரெயிலர்; சாய் பல்லவிக்கு குவியும் பாராட்டுகள்:

தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிக பிரபலமாக இருப்பவர் சாய் பல்லவி. நடிப்பு, நடனம் என சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார். தமிழில் சில கதாபாத்திரங்களில் நடித்த சாய் பல்லவி, 2015 ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தில் மலர் கதாபாத்திரத்தில் நிவின் பாலி உடன் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இப்படி மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். தெலுங்கில், ஃபிடா , மிடில் கிளாஸ் அப்பாயி, லவ் ஸ்டோரி, ஷாம் சிங்க ராய் போன்ற படங்களிலும், தமிழில் தியா, மாறி 2, என்.ஜி.கே, பாவ கதைகள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில்  இவரது நடிப்பில் வெளியான விரத பர்வம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அடுத்ததாக சாய் பல்லவி கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் கார்கி படத்தில் நடித்து வருகிறார். படமானது ஜூலை 15 ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது. படத்தை ஜோதிகா மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் அநீதிக்கு எதிராக போராடும் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். திடீரென கைது செய்யப்பட்ட தந்தையை மீட்க போராடும் பெண்ணாக நடித்திருக்கும் சாய் பல்லவிக்கு உறுதுணயாக இருக்கும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் காளி வெங்கட் நடித்திருக்கிறார். தனக்கு வார்த்தைகள் திக்கும் பட்சத்திலும், கார்கியின் வழக்கை எடுத்து நடத்துகிறார் காளி. இறுதி வரை சாய் பல்லவியின் தந்தையாக யார் நடித்திருக்கிறார் என்பதை காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மக்களிடையே எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படமானது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. தற்போது ட்ரைலர் வெளியான சில மணி நேரத்திலேயே 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

மிகவும் வித்தியாசமான ட்ரெயிலராக அமைந்துள்ள நிலையில், ரசிகர்கள் சாய் பல்லவிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.