தனுஷ் படம் திரையிடப்பட்ட தியேட்டரை அடித்து உடைத்த ரசிகர்கள் !!

திரைப்படக் காட்சி ரத்தான அதிருப்தியில் ரசிகர்கள் திரையரங்கின் முகப்புக் கண்ணாடியை அடித்து உடைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தனுஷ் படம் திரையிடப்பட்ட தியேட்டரை அடித்து உடைத்த ரசிகர்கள் !!

திருச்சிற்றம்பலம்

சென்னையின் பழம்பெரும் திரையங்குகளுள் ஒன்றான ஆல்பர்ட் திரையங்கில் நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இன்று பிற்பகல் 12 மணி காட்சிக்கான டிக்கெட் விநியோகம் இணையதளம் வழியாகவும், நேரடியாகவும் நடந்து முடிந்த நிலையில், திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வந்தனர்.

காட்சி ஆரம்பிக்க தாமதம்

இதற்கிடையில் திரையரங்கில் உள்ள புரொஜக்டரில் ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறு காரணமாக 12 மணி காட்சி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் 12 மணி காட்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த ரசிகர்கள் அதிருப்தி ஏற்பட்டு திரையரங்க நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கண்ணாடியை உடைத்த ரசிகர்கள்

அப்போது ரசிகர்களுள் சிலர் திரையரங்கின் முகப்பு கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து திரையரங்க நிர்வாகிகள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த எழும்பூர் போலீசார் ரசிகர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து பணம் போட்டு உடைக்கப்பட்ட கண்ணாடியை மாற்றித்தருவதாக உறுதியளித்தனர்.

திருப்பி கொடுக்கப்பட்ட பணம்

அதேபோல திரையரங்க நிர்வாகிகளும் ரத்து செய்யப்பட்ட காட்சியின் டிக்கெட்டுக்கு வசூலித்த பணத்தை ரசிகர்களிடம் திருப்பி அளித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. பின்னர் புரொஜெக்டார் பழுது சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்த காட்சிகள்  வழக்கம்போல் திரையிடப்படும் என திரையரங்க நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.