நயன்- விக்கி ஜோடியின் குழந்தை விவகாரம்; இன்னும் நீங்க அத விடலையா? - செய்தியாளர்களிடம் கேட்ட அமைச்சர்!

நயன்- விக்கி ஜோடியின் குழந்தை விவகாரம்; இன்னும் நீங்க அத விடலையா? - செய்தியாளர்களிடம் கேட்ட அமைச்சர்!
Published on
Updated on
2 min read

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது தொடர்பாக நயன்தாரா- விக்னேஷ்சிவன் தம்பதியிடம் விளக்கம் கேட்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழ் திரையுலகின் பெண் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா தனது நீண்ட நாள் காதலான இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி கரம்பிடித்தார். அதன்பிறகு அந்த தம்பதி இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது போன்ற புகைப்படங்களை விக்னேஷ் சிவன் அவ்வப்போது தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு வருவார். அதற்கு இணைய வாசிகள் சிலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தும், ஒருசிலர் வாழ்றாயா மனுஷன் உள்ளிட்ட பல கமெண்ட்ஸ்களை தெறிக்கவிட்டு வந்தனர். 

இப்படி தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்த விக்னேஷ்சிவன், கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. அது எப்படி திருமணம் ஆகி நான்கு மாதங்கள் தான் முடிவடைந்துள்ளது. அதுகுள்ள எப்படி குழந்தைகள் பிறந்தது; ஒருவேளை அவர்களுக்கு வாடகை தாய் மூலம் குழந்தைகள் பிறந்ததா? என இணையம் முழுவதும் தீயாய் கேள்விகள் எழுந்து வருகிறது. ஆனால், இன்னும் அவர்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை. இதனால் இவர்களுக்கு எப்படி குழந்தை பிறந்தது என்ற கேள்வி ரசிகர்கள் உள்பட அனைவர் மத்தியிலும் வட்டமடித்து வருகிறது. இதனிடையே, விக்கி - நயன் தம்பதிக்கு திருமணம் ஆகி 4 மாதங்களேயான நிலையில், வாடகை தாய் மூலம் அவர்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியனிடம் விக்கி-நயன்தாரா குழந்தைகள் பற்றி கேட்கப்பட்டது. இந்திய மருத்துவ சட்டப்படி வாடகை தாய் முறையை பயன்படுத்த திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்றும், இதனால் நயன்தாரா சட்டவிதிகளை மீறினாரா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதலளித்த அவர், இன்னும் அந்த விஷயத்தை நீங்கள் விடவில்லையா? என்று கேட்டு விட்டு, நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி சட்ட விதிகளை மீறினாரா என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். குழந்தைகள் விஷயத்தில் நயன்தாரா சட்டவிதிகளை மீறினாரா? அப்படி மீறியிருந்தால் எதன் அடிப்படையில் மீறினார்? என்ற அறிக்கையை டி.எம்.எஸ்சிடம் கேட்டு இருப்பதாக தெரிவித்த அவர், அந்த அறிக்கைக்கு பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com