திமுக-வின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள உதயநிதி ஸ்டாலின் அரசியல் வாழ்க்கை மட்டுமின்றி, கலைத் துறையிலும் சிறந்து விளங்குகிறார். குருவி என்ற படம் மூலம் தயாரிப்பாளராக கோலிவுட்டிற்கு எண்ட்ரி கொடுத்த உதய், ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படம் மூலம் ஹீரோவாகவே கால்தடம் பதித்தார்.
அரசியல் அறிமுகம்:
தொடர்ந்து பல படங்களை நடித்து வந்த உதய், தனக்கு அரசியல் மீது ஆர்வம் இல்லாததாகத் பல முறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், திமுக முன்னாள் தலைவர் மற்றும் அவரது தாத்தாவாகிய கலைஞர் மு கருணாநிதி உயிரிழந்ததை அடுத்து அரசியல் உலகை எட்டிப் பார்க்கும் சூழல் அவருக்கு ஏற்பட்டது.
நெஞ்சுக்கு நீதி:
இதைத் தொடர்ந்து, அவர் பேசும் ஒவ்வொரு கருத்துகளும், அரசியலாக்கப்பட்டது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தில் பல சமூக கருத்துகளை பகிரங்கமாக பேசியதைத் தொடர்ந்து, தனது அரசியல் வாழ்க்கையை படங்கள் மூலம் வியாபாரம் செய்யப் பார்ப்பதாகப் பலராலும் குற்றம் சாட்டப்பட்டார். இந்த படம், பாலிவுட்டில், போனி கப்பூர் தயாரிப்பில், ஆயுஷ்மான் குரானா நடித்த ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னணி தயாரிப்பாளர்:
இதனைத் தொடர்ந்து, பல பெரும் தமிழ் படங்களை வெளியிடும் ஒரு தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்த தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலம், பல வெற்றிப் படங்களை மக்களுக்குக் கொடுத்தார். சமீபத்தில் வெளியாகி, உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற விக்ரம் படத்தையும் ரெட் ஜெயெண்ட் மூவீஸ் தான் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
போனிக்கு அடுத்து உதய்:
பாலிவுட்டிற்கு போனி கப்பூர் போல, கோலிவுட்டிற்கு உதய் என்றளவில் உயர்ந்து நிற்கும் உதயநிதி, தற்போது, அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘லால் சிங் சட்டா’ படத்தின் தமிழ் உரிமத்தைப் பெற்றிருக்கிறார்.
நான் அமீர் ஃபேன்:
அதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் தற்போது நடந்தது. அதில், தான் ஒரு மிகப்பெரிய அமீர் கான் ரசிகர் என்றும், தனது சிறு வயதில், வகுப்புகளை பங்க் செய்து விட்டு, அவரது படங்களை திருட்டுத் தனமாகப் பார்த்ததாகவும் கூறினார். மேலும், தனக்குப் பிடித்த ஹீரோவின் படத்தை, தானே தனது மொழியில் வெளியிடுவதைக் குறித்து பேசி பெருமிதம் கொண்டார் உதய்.
இந்தி தெரியாது போடா!
இதனையடுத்து, பத்திரிக்கையாளர் ஒருவர், “இந்தியை எதிருக்கும் திமுகவில் இருக்கும் நீங்களே, தற்போது இந்தி படங்களை விநியோகம் செய்கிறீர்களே! எப்படி இப்போது இந்த படத்திற்கு விளம்பரம் செய்யப்போகிறீர்கள்? மேலும், உங்கள் கட்சி தான் இந்தி தெரியாது போடா என்பதை பிரபலப்பட்த்தி, அதனை பலரும் டீ-ஷர்டாக எல்லாம் அணிந்து இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் செய்தனர்! இப்படியிருக்க, உங்களது இந்த முடிவு சரியானது என நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டுள்ளார்.
“திமுக இந்தியை எதிர்த்தது இல்லை”
இதற்கு பதிலளித்த உதய், “திமுக இந்தியை எதிர்த்தது இல்லை” என்று கூறினார். மேலும் பேசிய போது, “திமுக என்றும் இந்திக்கு தனிப்பட்ட முறையில் எதிர்[ப்பு தெரிவித்தது இல்லை. இந்தி திணிப்புக்குத் தான் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம். இந்தி யார் வேண்டுமானாலும் இஷ்டப்பட்டு கற்றுக்கொள்ளலாம், இந்தியைக் கற்றுக் கொள்ள திமுக என்றும் எதிர்ப்பு தெரிவித்தது இல்லை. அமீர் கான் ரசிகர் நான். அவர் படத்தை வெளியிடுவதில் எனக்கு மகிழ்ச்சி.” என்று கூறினார்.
கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் உதய், அரசியல் வாழ்க்கையையும், சொந்த வாழ்க்கையையும் மிக அழகாக பேலன்ஸ் செய்து வருவதாக பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம், வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.