காளி போஸ்டரால் தொடரும் சர்ச்சை...வெளியிட்டதற்கு மன்னிப்பு கோரிய டொரோண்டோ அருங்காட்சியகம்...

லீனா மணிமேகலை என்ற பெண் இயக்குனரின் இயக்கத்தில் உருவாகியுள்ள காளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், டொராண்டோ மெட்ரோபொலிடன் பல்கலைக்கழகம் மற்றும் ஆகா கான் அருங்காட்சியகம் ஆகிய இரண்டும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளன. மேலும் ட்விட்டர் நிறுவனம், லீனாவின் காளி பதிவையும் நீக்கியுள்ளது.

காளி போஸ்டரால் தொடரும் சர்ச்சை...வெளியிட்டதற்கு மன்னிப்பு கோரிய டொரோண்டோ அருங்காட்சியகம்...

பிரபல LGBTQIA+ ஆதரவாளராக இருக்கும் சுயாதீன இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான லீனா மணிமேகலை பல படங்களை எடுத்து, மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். குறிப்பாக பல சர்ச்சைக்குரிய மற்றும் யாரும் தொடாத தலைப்புகளில் இவர் எடுக்கும் பல ஆவணப் படங்கள், நாடளவிலும், உலக அளவிலும் கவனத்தைப் பெற்றது. அவர் இயற்றிய பரை, செங்கடல், மாடத்தி போன்ற படங்கள் தான் அவரது புகழை பரவி விட்டது. மதுரையில் பிறந்து, டொராண்டோவில் திரைப்படத் தயாரிப்பாளராக வலம் வரும் லீனா, தனது படங்களில் LGBTQIA+ குறித்து பல ஆதரவுக் கோரும் படங்களை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மேலும் ஒரு ஆவணப்படத்தை இயக்கி இருக்கிறார் லீனா. காளி என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பல தரப்பிலிருந்து எதிர்ப்புகளை சந்தித்தது. சர்ச்சைகளைக் கிளப்பிய இந்த போஸ்டரில், இந்து மதக் கடவுள்களில் ஒருவராகப் போற்றப்படும் காளி தெய்வத்தின் உடைகளை அணிந்த பெண் ஒருவர், ஒரு கையில் LGBTQIA+ -ன் கொடியைப் பிடித்திருப்பது போலவும் மறுகையில், சிகெரட்டைப் பிடித்து புகை விடுவது போலவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால், தங்களது கடவுளையும் மதத்தையும் அவமதிப்பதாகக் கொந்தளிக்கும் நெட்டிசன்கள் மற்றும் பலதரப்பில் இருந்தும்  இவரது காளி படைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய லீனா, “காளி என்பவள் - வேட்டை சமூகங்கத்தின் கடவுள். ஊருக்கொரு பிடாரி, ஏரிக்கொரு அய்யனார் என சொலவடை உண்டு. நம் ஊரில் பச்சைக்காளி, பவளக்காளி, கருங்காளின்னு பிடாரி போன்ற பல கடவுள்கள் அனைத்து இடங்களிலும் உள்ள நிலையில், அந்தக் காளி டோரோண்டோ நகரத்தில் வலம் வந்தால் என்ன நடக்கும் என்பதை சொல்லும் படம் தான் என் `காளி' ” என பேசி இருந்தார். 

இவர் இப்படி சொன்னாலும், மக்கள் பலராலும் இந்த போஸ்டரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில் லீனா, கடந்த 2013ம் ஆண்டு பிரதமர் மோடி குறித்து பதிவிட்ட பழைய பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், " என் வாழ்நாளில் மோடி இந்த நாட்டின் பிரதமரானால், எனது பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, பான்கார்டு மற்றும் எனது குடியுரிமை ஆகியவற்றை விடுத்து சரணடைவேன். நான் சத்தியமாக  சொல்கிறேன்! " என அந்த பதிவு அமைந்திருந்தது. அதாவது மோடி இத்தூதுவத்திற்கு சாதகமாக பேசுவதனால் அவர் இப்படி ட்வீட் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

மேலும், கடந்த 2020 ம் ஆண்டு லீனாவின் ஒரு பதிவில், " ராமர் என்பவர் கடவுள் அல்ல, பாரதீய ஜனதா கட்சி கண்டுபிடித்த எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்." என பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவும் தற்போது வைரலாக பரவி வர இணையவாசிகள், எந்த ளவிற்கு இந்துத்துவத்தை எதிர்பவராக இருக்கிறார் என்பதற்கு சான்றாக இது உள்ளது என பதிவிட்டு வருகின்றனர். இப்படி பெரும் சர்ச்சையாக வெடித்து வரும் நிலையில், இந்த பிரச்சனை டொரோண்டோவில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் எடுத்து செல்லப்பட்டதை தொடர்ந்து படத்தின் திரையிடல் ரத்து செய்யப்பட்டது. மேலும், டொராண்டோ மெட்ரோபொலிடன் பல்கலைக்கழகம் மற்றும் ஆகா கான் அருங்காட்சியகம் ஆகிய இரண்டும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டன. பல தரப்பினரின் வெறுப்புகளைச் சேர்த்து வரும் காளி படத்தின் வெளியீடு எப்படி நடக்கும் என்ற கேள்விகள் கிளம்பியுள்ளது. அதோடு, ஆவணப்படத்தை மாநிலத்தில் தடை செய்வது பற்றி அரசாங்கம் சிந்திக்கும் என்று மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்தார். மேலும் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ட்விட்டர் நிறுவனம், லீனாவின் டீவீட்டை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.