வாலிபர் பின் தொடர்ந்து தொந்தரவு :  பிரபல ஆர்.ஜே. வீடியோ ஆதாரத்துடன் புகார் !!

டிவி நிகழ்ச்சியில் பிரபலமான மற்றும் ஆர் ஜே வுமான வைஷ்ணவி, வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து தொந்தரவு செய்வதாக வீடியோ ஆதாரங்களுடன் சமூகவலைதளத்தில் புகார் அளித்துள்ளார்.

வாலிபர் பின் தொடர்ந்து தொந்தரவு :  பிரபல ஆர்.ஜே. வீடியோ ஆதாரத்துடன் புகார் !!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ்  நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் வைஷ்ணவி. இவர் ரேடியோ ஜாக்கி ஆகவும் பிரபலமானவர் ஆவார். தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மர்ம வாலிபர்  ஒருவரைப் பற்றி பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில் இருசக்கர வாகனத்தில் வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து வருவதாகவும் வீட்டின் வாசலுக்கு வந்து தன்னை தொந்தரவு செய்வதாகவும் வீடியோ பதிவிட்டு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் துறையின் சமூக வலைத்தள பக்கத்தை இணைத்து இந்த புகாரை தெரிவித்துள்ளார். தன் வளர்ப்பு நாயுடன் நடை பயிற்சி மேற்கொள்ளும் போது மிரட்டும் விதமாக பின்தொடர்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தான் தங்கியிருக்கும் வீட்டை வாலிபர் தெரிந்து கொள்ள கூடாது என 30 மணி நிமிடம் வீட்டுக்கு செல்லாமல் பதட்டத்துடன் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அதன்பின் அந்த வாலிபருக்கு தெரியாமல் வீட்டிற்கு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் தனக்குத் தொந்தரவு தரும் அந்த நபர் குறித்து புகார் அளிப்பதற்காக செல்போன் பேசுவது போல்  வீடியோ படம் எடுத்து வெளியிட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தனது தாயிடம் தெரிவித்தபோது, அந்த நபர் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டாம் எனவும், பழிவாங்கும் நோக்கில் ஆசிட் வீசினால் என்ன செய்வது என்று அச்சத்துடன் கேட்டதாக தெரிவித்துள்ளார். 

புகார் அளிக்காமல் இருப்பதால் மீண்டும் அந்த மர்ம நபர் தொந்தரவு செய்யாமல் இருப்பாரா? அல்லது வேறு ஏதேனும் பெண்ணிற்கு இதுபோன்று நடக்க வாய்ப்பிருக்கிறது என்ற அடிப்படையில் அதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு புகார் அளித்த வைஷ்ணவிக்கு ,தைரியமாக கருத்துக்களை பதிவிட்டு புகார் அளித்ததற்கு காவல்துறை தரப்பில் இருந்து  சமூக வலைதளம் மூலம் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதாகவும் இதுபோன்று நிலைகளில் 100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லது காவலன் உதவி என்ற செயலியை பாதுகாப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளுமாறும் சென்னை காவல்துறை சமூக வலைதளம் மூலம் பதில் அளித்துள்ளது.