போண்டாமணிக்கு உதவுவதுபோல் நடித்து பணத்தை சுருட்டிய நபர்...நடந்தது என்ன?

போண்டாமணிக்கு உதவுவதுபோல் நடித்து பணத்தை சுருட்டிய நபர்...நடந்தது என்ன?

நகைச்சுவை நடிகர் போண்டாமணி இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியபோது, அவருக்கு உதவி செய்வது போல் நடித்து 1லட்சம் ரூபாயை  சுருட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சினிமாவை விட்டு விலகிய போண்டாமணி:

தமிழ் சினிமாவில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான பாக்யராஜின் பவுனு பவுனுதான் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் போண்டாமணி. அதைத்தொடர்ந்து, தென்றல் வரும் தெரு படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. அதற்கு பிறகு, கவுண்டமணி, வடிவேலு, விவேக்குடன் இணைந்து 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை காட்சிகளில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால், சில ஆண்டுகளாக சினித்துறையில் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தார்.

இணையத்தில் வைரலான வீடியோ:

இந்த சூழ்நிலையில், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு இரண்டு கிட்னிகளும் செயலிழந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை நடிகர் பெஞ்சமின் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். 

இதையும் படிக்க: நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு நடிகர் தனுஷ் நிதியுதவி..! நெகிழ்ந்து நன்றி தெரிவித்து வீடியோ..!

உதவி கரம் நீட்டிய பிரபலங்கள்:

போண்டாமணி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற வீடியோ வெளியானதையடுத்து, போண்டாமணியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவரின் மருத்துவ செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, நடிகர் வடிவேலு, தனுஷ், விஜய்சேதுபதி என பலரும் போண்டாமணிக்கு உதவி கரம் நீட்டினர். 

வீடு திரும்பிய போண்டாமணி:

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த போண்டாமணி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையில், அவர் மருத்துவமனையில் இருந்தபோது போண்டாமணிக்கு உதவியாக இருந்த ராஜேஷ் என்பவரிடம் போண்டா மணியின் மனைவி மாத்திரை வாங்குவதற்காக அவருடைய ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார். ஆனால், ராஜேஷ் அவருக்கு உதவுவதுபோல் நடித்து கார்டை வாங்கிய அவர், மாத்திரையை வாங்காமல் வங்கிக்கணக்கிலிருந்த 1 லட்சம் ரூபாய்க்கு தங்க நகைகளை வாங்கிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

உதவுவது போல் நடித்து பணத்தை சுருட்டிய நபர்:

பின்னர் பணம் எடுத்தது குறித்த குறுஞ்செய்தி போண்டாமணியின் மனைவி செல்போனிற்கு வந்துள்ளது. பிறகு இது தொடர்பாக போண்டாமணியின் மனைவி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய போலீசார், உதவுவதுபோல் நடித்து பணத்தை சுருட்டிய ராஜேஷை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.