நடிகர் ரன்வீர் சிங் மீது வழக்கு பதிவு ...! வித்தியாசமான போட்டோஷூட்டால் வந்த வினை...!

நடிகர் ரன்வீர் சிங் - இன் வித்தியாசமான போட்டோஷூட் அனைவரது கவனத்தையும் பெற்ற நிலையில், அவர் மீது மும்பை செம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தற்போது அந்த புகாரின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ரன்வீர் சிங் மீது வழக்கு பதிவு ...! வித்தியாசமான போட்டோஷூட்டால் வந்த வினை...!

தனது வாழ்க்கையில் தனக்குப் பிடித்தது போல வாழ்ந்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், தான் இருக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஏதாவது ஒரு வகையில், கவனம் ஈர்த்து விடுவார். அதனால், பல சர்ச்சைகளிலும் சிக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். நடிகை தீபிகா படுகோனேவை காதல் திருமணம் செய்த ரன்வீர், தனது ஃபேஷன் திறனை மிகவும் வித்தியாசமான, மற்றும் விமர்சனத்திற்குறிய வகையில் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். 

ஆனால், சமீப நாட்களாக எந்த சர்ச்சைக்குள்ளும் சிக்காமல் இருந்த நடிகர் ரன்வீர், ஒரு போட்டோஷூட்டை நடத்தி, அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ஒட்டு மொத்த இணைய வாசிகளின் கவனத்தையும் பெற்றுவிட்டார். பிரபல சர்வதேச பதிப்பான தி பேப்பர் மேகசீனின் கவர் புகைப்படத்துக்காக போட்டோஷூட் செய்த ரன்வீர், நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார்.

அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாக, பல தரப்பினரிடமிருந்தும் விமர்சனங்கள் வந்துகொண்டுள்ளன. அமெரிக்காவில், தனது தனிப்பட்ட வீடியோக்களும், போட்டோக்களும் பதிவிட்டு இன்று முன்னணி பிரபலங்களில் ஒருவராக இருக்கும் கார்டேஷியன்களைப் போல, ரனிவீரும் ஆக முயற்சி செய்கிறார் என்றெல்லாம் விமர்சித்து வரும் நிலையில், அவரது மனைவி தீபிகாவையும்  நெட்டிசன்கள் மோசமாக கேலி செய்து வருகின்றனர். ஆனால், ஒரு சிலர், தைரியமாக இப்படி ஒரு போட்டோஷூட் நடத்தியதாக ரன்வீருக்கு தங்களது பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். 

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வர, இது போன்ற நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டதற்காக நடிகர் ரன்வீர் சிங் மீது மும்பை செம்பூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட புகாரை கவனத்தில் கொண்டு, நடிகர் ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் நிர்வாண படங்களை வெளியிட்டதற்காக அவர் மீது இபிகோ 292,293,509-ன் படி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, ரன்வீருக்கு ஆதரவளிக்கும் வகையில், பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், தனது புதிய படமான டார்லிங்-கிற்கான ப்ரொமோஷன்களில் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது, “எனக்குப் பிடித்த ரன்வீர் குறித்த எந்த ஒரு தவறான கருத்துகளையும் நான் ஆதரிக்க மாட்டேன். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். மேலும், அவர் அனைவருக்கும் பிடித்தமான மனிதர்” என்று கூறினார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, மறு புறம் தென்னிந்திய ரன்வீர் ஆக மாறி வருகிறார் கோலிவுட் நடிகர் விஷ்ணு விஷால். தனது மனைவி எடுத்த தனது நிர்வாணப் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இதுவும் படு வைரலாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.