சென்சார் போர்டு எதற்கு? ஆவேசமான 'கள்ளன்' திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்!!

'கள்ளன்' திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்சார் போர்டு எதற்கு? ஆவேசமான 'கள்ளன்' திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்!!
Published on
Updated on
2 min read

எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் கள்ளன் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட விடாமல் சில சாதி அமைப்புகள் திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டி வருகின்றன. 'கள்ளன்' என்ற சொல்லை டைட்டிலாக வைக்கக் கூடாது என நீதிமன்றத்தில் இந்த சாதி அமைப்புகள் வழக்கு தொடர்ந்து அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் சாதி அமைப்புகள் கள்ளன் திரைப்படத்தை திரையிடவிடாமல் தடுத்து வரும் செயலைக் கண்டித்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இது குறித்து பேசிய இயக்குனர் சந்திரா தங்கராஜ், "நல்லாட்சி நடந்து கொண்டிருக்கும் பெரியார் மண்ணில் சாதி அமைப்புகளின் ஆதிக்கம் தலை தூக்க விடாமல் முதலமைச்சர் அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். மேலும் கள்ளன் என்ற தமிழ் சொல் திருடர்களை தான் குறிக்கிறது. ஏற்கனவே திருடன், கள்வர் போன்ற பெயர்களில் படங்கள் உள்ளதால் கள்ளன் என்ற சொல்லை டைட்டிலாக வைத்ததாக அவர் தெளிவுப்படுத்தினார்.

ஜாதி அமைப்பைச் சேர்ந்த ஒரு தலைவர் என்னுடைய அலைபேசி எண்ணை பொதுவெளியில் அனுப்பியிருக்கிறார். அவர்கள் பின்னிரவு நேரங்களில் போன் போட்டு ஆபாசமாகப் பேசுகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருத்தர் ஆபாச படங்களை அனுப்பி இது போல் எனக்கும் பண்ண முடியுமா என்று கேட்கிறான். கடந்த ஒரு மாதமாகவே இது போல் ஆபாச தாக்குதல் நடத்துகிறார்கள். இதுதான் பெண்களுக்கு இவர்கள் கொடுக்கிற மரியாதை" என்று கண் கலங்கினார்.

தயாரிப்பாளர் மதியழகன் பேசுகையில், " ஒட்டுமொத்த தமிழ் திரையுலக பிரச்சினை இது. என் தனிப்பட்டப் பிரச்சனை அல்ல. எனவே இதை புரிந்து கொண்டு தமிழ் திரைப்படத்தில் உள்ள அனைத்து தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும்  இந்த வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்து இந்த படம் திரையரங்கில் வெளியிடுவதற்கு  ஆவண செய்ய வேண்டும். இந்த திரைப்படத்திற்கு தணிக்கை துறை முறையாக ஒப்புதல் அளித்துள்ளது மற்றும் இதற்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அது மட்டுமின்றி இந்த அமைப்புகள் கேட்டபடி வருத்தம் தெரிவித்து கடிதமும் கொடுத்துள்ளோம். இத்தனைக்கு பிறகும் சில சாதி அமைப்புகள் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட விடாமல் மிரட்டுவது அநீதியின் உச்சம். 

இனிமேல் ஒவ்வொரு தயாரிப்பாளரும் சாதி அமைப்புகளின் விதிகளுக்கு உட்பட்டு தான் படம் எடுக்க வேண்டுமென்றால் சென்சார் போர்டு எதற்கு? நாங்கள் எங்களுக்காக மட்டும் பேசவில்லை. தமிழ் சினிமா தொடர்ச்சியாக இது போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு இருக்கிறது. தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று இருவரும் முதல்வருக்கு வேண்டுகோள் வைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com