மதுவின் சுய சரிதையில் நடிக்க இருந்த ஃபகத் பாசில் : கைவிடப்பட்டதன் காரணம் என்ன?

இறந்த மதுவின் சுய சரிதையில் பகத் பாசில் நடிக்க இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுவின் சுய சரிதையில் நடிக்க இருந்த ஃபகத் பாசில் : கைவிடப்பட்டதன் காரணம் என்ன?

கடந்த 2018இல் பரிதாபமாகக் கொல்லப்பட்ட ஆதிவாசி மதுவின் சுயசரிதையை படமாக எடுக்க இருந்த நிலையில், படத்தின் கதாநாயகனாக நடிகர் ஃபகத் பாசில் நடிக்க இருந்தார். ஆனால், அந்த படம் தற்போது கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உணவு கொண்டு போன போது, கடையில் இருந்து உணவு பொருட்களைத் திருடியதாக குற்றம் சாட்டி, பொது மக்களால் ஒரு ஆதிவாசி அடித்தே கொல்லப்பட்டார். அட்டப்படி, பாலக்காட்டில் நடந்த இந்த கொடூர சம்பவம், ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், பொது மக்கள் என பலராலும் கண்டிக்கப்பட்ட இந்த சம்பவம், இன்று வரை பலரது மனதை வருடி வருகிறது.

கேரளாவில், ஒரு கடையில் இருந்து மனநலம் சரியில்லாத ஆதிவாசியான, மது என்பவர் ஒரு கடையில் அரிசி மற்றும், மஞ்சள், சார்ஜர் ஆகிய பொருட்களைத் திருடியதாக பொது மக்களால் குற்றம் சாட்டப்பட்டார். மேலும், அங்கிருந்தவர்களால் அடித்துத் துன்புறுத்தப்பட்டார். சரியான ஆதாரம் இல்லை என்றாலும், அவரை கட்டி, அருகில் இருந்த காட்டுக்கு கொண்டு சென்ற அந்த பொது மக்களில் சிலர், மதுவை கருணையின்றி கொடூரமாக அடித்தனர்.

பின், அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் சென்ற நிலையில், போலிஸ் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மதுவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில், போலீசாரின் வாகனத்திலேயே வாந்தி எடுத்து உயிர் நீத்தார். நடந்த நிலை கூட புரியாத மது பரிதாபமாக உயிரிழந்தார். இவரது பரிதாப நிலையை செல்ஃபீ எடுத்தவர்களையும், இவரது இந்த நிலைக்கு காரணமான 9 பேரையும் வலை வீசி போலிஸ் தேடி, அதில் இருவரை கைது செய்ததாகத் தகவ்ல்கள் வெளியாகின.

இந்த செய்தி பெரிதாகப் பேசப்பட்டது, மேலும், தேசிய ஊடகங்களையும் ஈர்த்தது. இதனால், பாதிக்கப்பட்ட மதுவின் கதையை ஒரு சுய சரிதை படமாக உருவாக்க மலையாள இயக்குனர் ரஞ்சித் என்பவர் முன்வந்துள்ளதாகக், கடந்த 2021ம் ஆண்டு தகவல்கள் வெளியாகின. இந்த படத்தின் மதுவாக மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான ஃபகத் ஃபாசில் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி, ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இந்த படத்திற்கு மது 703 என்று பெயர் வைக்கப்பட்டு First Look கூட வெளியாகி இருந்தது. ஆனால், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இந்த படத்தை வெளியிடக்கூடாது என்றும் இது தொடர்பாக எந்த தகவலும் தெரியப்படுத்த கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்கள்.ஏனென்றால் , இந்த படம் வந்தால் வழக்கின் நோக்கம் திசை மாறும் என்று கூறப்படுகிறது. ஆகையால் படத்தின் போஸ்டர் மட்டும் வெளியாகி இருக்கிறது. அதில் பகத் பாசில் பார்ப்பதற்கு அப்படியே ஆதிவாசி மது போல் இருக்கிறார்.

ஆனால், பின்பு அது குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகாத நிலையில், படம் கைவிடப்பட்டதாகத் தற்போது சில வதந்திகள் பரவி வருகின்றன. இதனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.