நடிகர் பிரஜினின் டி3 படம்... ஓ.டி.டி. தளங்களில் வெளியிட தடை!!!

நடிகர் பிரஜினின் டி3 படம்... ஓ.டி.டி. தளங்களில் வெளியிட தடை!!!

நடிகர் பிரஜின் நடித்துள்ள டி3 படத்தை நீதிமன்ற அனுமதி இல்லாமல் ஓ.டி.டி. தளங்களில் வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை ஜே.கே.எம். புரொடக்‌ஷனஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சாமுவேல் காட்சன் தாக்கல் செய்த மனுவில், இயக்குனர் முத்துபாலாஜி என்பவர் 2020ல் விசாரம் என்கிற படத்தின் பணிகளுக்காக 15 லட்ச ரூபாய் கடன் வாங்கி இருந்ததாகவும், படத்தின் பணிகள் முடிந்தவுடன் 40 சதவீத பங்கை கொடுப்பதாக தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விசாரம் படம் வெளியாகாத நிலையில், தான் அடுத்து இயக்கும் டி3 படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்து படத்தை தயாரிக்கவும், வெளியீட்டில் 60 சதவீத பங்கு தருவதாகவும் 2022 ஜூன் 15ல் ஒப்பந்தம் போடப்பட்டதாக மனுவில் கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரஜின், வித்யா பிரதிப், சார்லி ஆகியோர் நடிப்பில் டி3 படத்தை தயாரிக்க 4 கோடி ரூபாய் செலவழித்த நிலையில்,  தன்னுடைய ஒப்புதல் பெறாமல், படத்தின் ஆடியோ உரிமைகளை டிப்ஸ் தமிழ் நிறுவனத்திற்கு, அவரது சகோதரர் மனோஜ் என்பவரின் பி மாஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் விற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு  60 சதவீத உரிமைத் தொகையை கொடுக்காமல், பி மாஸ் நிறுவனம் தயாரித்ததாக கூறி, சென்சார் சான்றிதழும் வாங்கி மார்ச் 17ல் படம் வெளியிட்டுவிட்டதால், டி3 படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

டி3 படத்தின் தயாரிப்பாளர் தனது நிறுவனம் தான் என அறிவிக்க வேண்டும் என்றும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சாமுவேல் காட்சன் தன் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
 
இந்த வழக்கு நீதிபதி எஸ் சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட அனுமதித்தால், தனது பங்கு கிடைக்காமல் போய்விடும் என வாதிடப்பட்டது.

இயக்குனர் தரப்பில், ஒப்பந்தம் போட்பபட்டது உண்மைதான் என்றும், படத்தின் வசூல் கணக்குகளை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு, டி3 படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படாது என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், டி3 மூலம் திரட்டப்பட்ட வருவாய் குறித்த கணக்கு விவரங்களை, ஆடிட்டர் மூலமாக சான்றளித்து ஏப்ரல் 19ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய டி3 பட குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிக்க:  பெசன்ட்நகரில்... "செந்நீர்க் காவியம்" திருச்சிலுவைப்பாதை!!