அதிக சம்பளத்தால் தரம் குறைந்து போன தமிழ் சினிமா - ரஜினி, விஜய், அஜித்தை மறைமுகமாக தாக்கிய அருண்பாண்டியன்!!

முன்னணி நடிகர்களின் சம்பளத்தால், தமிழ் சினிமாவின் தரம் குறைந்து விட்டதாக, நடிகர் அருண்பாண்டியன் விமர்சித்துள்ளார்.

அதிக சம்பளத்தால் தரம் குறைந்து போன தமிழ் சினிமா - ரஜினி, விஜய், அஜித்தை மறைமுகமாக தாக்கிய அருண்பாண்டியன்!!

இந்தி, தெலுங்கு, கன்னட திரையுலகிற்கெல்லாம் முன்னோடியாக விளங்கியது தமிழ் திரையுலகம். ஒரு காலத்தில் சென்னையில் தான் அனைத்து மொழி திரைப்படங்களும் தயாராகின. ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன், மணிரத்னம் ஆகிய இயக்குனர்கள் தரமான படைப்புகளை தந்தனர். 

மற்ற மொழிகளின் திரைப்படங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினர். தற்போது நிலைமை தலைக்கீழாக மாறிவிட்டது. பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்., கேஜிஎப், புஷ்பா என வேற்றுமொழி திரைப்படங்கள் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதேசமயம், தமிழ் திரைப்படங்களின் தரம் குறைந்துகொண்டே வருகிறது. இதற்கு நடிகர்களின் சம்பளமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி கதாநாயகர்கள் அதிகளவில் சம்பளம் பெறுவதால், அவர்களது படங்களுக்கு போதிய செலவு செய்ய முடிவதில்லை. இதனால், தமிழ் திரைப்படத்தின் தரம் குறைந்து கொண்டே வருகிறது. முன்னணி நடிகர்களின் படங்கள் தோல்வியை தழுவி வருகின்றன. மற்ற மொழி படங்கள் பான் இந்தியா படமாக கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ் படங்கள், தமிழகத்திலேயே போதிய வரவேற்பை பெறமுடியாமல் தள்ளாடி வருகிறது. இது திரையுலகினர் மத்தியில் தற்போது பேசு பொருளாக மாறிவிட்டது.

இசைவெளியீட்டு விழா ஒன்றில் பேசிய நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன், தமிழ் திரையுலகின் தற்போதைய நிலையை வெளிப்படையாக கூறியுள்ளார். முன்னணி நடிகர்கள் வாங்குகிற அதிக சம்பளத்தால், தமிழ் திரைப்படங்களின் தரம் குறைந்து விட்டதாக விமர்சித்துள்ளார். முன்பெல்லாம் படத்தில் மொத்த பட்ஜெட்டில் 10 சதவீதம் அளவுக்கே நடிகர்கள் சம்பளம் பெறுவார்கள் என்றும், இது மாறியதால், தமிழ் சினிமா பின்னோக்கி செல்வதாகவும் கூறினார். அருண்பாண்டியனின் இந்த பேச்சு தற்போது விவாத பொருளாகியுள்ளது.