'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி குளறுபடிக்கு ஏ.ஆர்.ரகுமான் விளக்கம்...!

'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி குளறுபடிக்கு ஏ.ஆர்.ரகுமான் விளக்கம்...!

’மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு ஏற்பட்ட மோசமான நிகழ்வுகளுக்கு வருத்தம் தெரிவித்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

சென்னையை அடுத்த பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் 30 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் விதமாக  ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்தது. மழை காரணமாக அந்த இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 10 ஆம் தேதியான நேற்று இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்றும் ஏற்கனவே எடுத்திருந்த டிக்கட்களையே மீண்டும் காண்பித்தால் போதுமானது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதனால் இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் பலரும் படையெடுத்து சென்றதால் கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் நெடும் தூரம் அணிவகுத்து நிற்கும் அளவிற்கு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் போதிய வாகன நிறுத்தும் வசதி இல்லை என்றும் நிகழ்ச்சிக்கு வந்த பார்வையாளர்களுக்கு உட்காரும் வகையில் இருக்கை வசதிகள் இல்லை என்றும் ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வந்தனர். சிலர் போக்குவரத்து நெரிசல் காரணமாக நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வர முடியாமல் திரும்பி சென்றதாகவும் தெரிவித்திருந்தனர். 

இது தொடர்பாக விழா ஏற்பாட்டு நிறுவனம் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. திட்டமிட்டதை விட அதிகளவு ரசிகர்கள் கூடியதால் குழப்பம் ஏற்பட்டதாகவும், ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு முழு பொறுப்பேற்பதாகவும் விழா ஏற்பாட்டு நிறுவனமான ACTC Events நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ரசிகர்கள் பலரும் தங்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்று கூறி வந்த நிலையில், இசையமப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கியும் உங்களால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்றால் தங்கள் டிக்கெட்டினுடைய நகலை arr4chennai@btos.in என்ற மின்னஞ்சல் மூலமாக அனுப்புங்கள் எங்கள் குழு விரைவில் பதிலளிக்கும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ள அவர்,.. இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியில் நானே பலி ஆடாக இருந்துவிட்டுப் போகிறேன். வெளியில் என்ன நடக்கிறது என தெரியாமல் நிகழ்ச்சியில் கவனமாக இருந்துவிட்டேன். இந்த மோசமான நிகழ்வால் நான் மிகவும் மன வேதனை அடைந்துள்ளேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்த ஒவ்வொருவரும்  எங்களுக்கு முக்கியமானவர்கள் தான். மக்கள் விழித்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ள அவர் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மலர வேண்டும். சுற்றுலாத்துறை மேம்பாடு, திறமையான மக்களின் கூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் திறன், பார்வையாளர்களை விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்துதல் மற்றும் குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குதல் போன்றவை செய்ய வேண்டும் என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்