பள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது புதிய கட்டுப்பாடுகள்.! 

பள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது புதிய கட்டுப்பாடுகள்.! 

ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட கமிட்டியை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

பி.எஸ்.பி.பி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் சர்ச்சையாகின. அதைத் தொடர்ந்து ஆன்லைன் வகுப்பு தொடர்பாக நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவோம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதோடு இந்த வழிமுறைகளை கல்லூரிகளும் ஏற்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.  இதன் காரணமாக இந்த குழுஅமைக்கப்பட்டு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடும் என்று கூறப்படுகிறது. 

இந்த குழுவின் பரிந்துரைகளில் நேரடி வகுப்புகளைப் போன்றே, ஆன்லைன் வகுப்புகளிலும் உடை அணிதல் வேண்டும், ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க தனி குழு, வகுப்புகளை முழுவதுமாக ரெக்கார்ட் செய்ய நடவடிக்கை, புகார் பிரிவு உருவாக்குதல், இணைய வசதியை வேகப்படுத்துதல் போன்ற பரிந்துரைகள் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. 

மேலும் இந்த 7 பேர் கொண்ட கமிட்டி வரும் 11-ம் தேதிக்குள் வரைவு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.