"அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காதது ஏன்?" உயர்நீதிமன்றம் கேள்வி!

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காதது குறித்து கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதில் உள்ள சிக்கல் என்ன என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் கடந்த 2010 - 11ம் ஆண்டுகளில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.  ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட இவர்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

உதவிப் பேராசிரியர்களுக்கான பணியை செய்து வரும் தற்காலிக ஆசிரியர்கள், பணி வரன்முறை செய்யக் கோரியும், ஏற்கனவே நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு பணிப்நிரந்தரம் வழங்காமல், புதிதாக தற்காலிக ஆசிரியர்கள் தேர்வுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கூடாது என கூறியதுடன், மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தற்காலிக ஆசிரியர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு மாறாக தற்போது ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, அண்ணா பல்கலைக்கழகம், கடந்த ஆகஸ்டில் அறிவிப்பாணை வெளியிட்டதாகவும், அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகவும் நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

நிர்வாக காரணங்களுக்காக தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் முன்வைத்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒரே காரணத்துக்காக 10 - 12 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களை நியமித்து வருவதாகவும்,  நிரந்தர ஆசிரியர்கள் இல்லாமல் இந்த கல்வி நிறுவனங்களை செயல்பட அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.

மேலும், நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும் விஷயத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலைப்பாடு என்ன? 12 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாக உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்ய என்ன சிக்கல் உள்ளது? தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய தயங்குவதேன்? நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க ஏன் நேரடி தேர்வு நடத்த முடியாது? எனக் கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், செப்டம்பர் 26ம் தேதிக்குள் இந்த கேள்விகளுக்கு பதிலளித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதையும் படிக்க: திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை...!