
அரசு மருத்துவ கல்லூரியில் MBBS, BDS போன்ற மருத்துவ படிப்புக்களுக்கான கட்டண விவரங்களை மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. நடப்பாண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், நாடு முழுவதும், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுகள் துரிதப்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வரவேற்கப்படுவதாகவும், ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம் என சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான ஓராண்டு கட்டணம் ரூ.13,610 என்றும், பி.டி.எஸ். படிப்புக்கான ஓராண்டு கட்டணம் ரூ.11,610 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ESI மருத்துவக் கல்லூரியில் மட்டும் ஓராண்டுக்கான கட்டணம் ரூ.1லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ரூ.3.85லட்சம் முதல் ரூ.4லட்சம் வரை வசூலிக்கலாம் என்றும், பி.டி.எஸ். படிப்புக்கு ஓராண்டு கட்டணமாக ரூ.2.50 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்வில் இடம் ஒதுக்கீடு கிடைக்கப்பெற்ற மாணவர்கள் குறிப்பிட்ட காலத்தில் கல்லூரியில் சேராவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், படிப்பில் சேர்ந்த பின் இடைநின்றால் ரூ.1லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இடைநிற்றல் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.