"உங்கள் குழந்தை எதை படிக்க வேண்டும் என்று விரும்புகிறதோ அதை பெற்றோர்கள் படிக்க வையுங்கள் உங்கள் கனவை குழந்தைகளிடம் திணிக்காதீர்கள் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் ஜெய்கோபால் கரோடிய விவேகானந்தா வித்யாலயா அறக்கட்டளை பள்ளிகளின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் மற்றும் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினர்.
அப்போது பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி, இந்தியாவில் கிராஸ் என்றிலோமெண்ட் ரேஷியோ (Gross enrolment ratio) எப்போது வருகிறதோ அன்று தான் ஐஐடி சந்தோஷம் பெரும். கிராஸ் என்றிலோமெண்ட் ரேஷியோ அப்படி என்றால் அனைத்து குழந்தைகளும் 8 ஆம் வகுப்பை தாண்ட வேண்டும் என்று பொருள் என்று தெரிவித்தார்.
மேலும், இங்கே உள்ளவர்கள் அனைவரும் கிராமத்தில் இருந்து தான் வந்து இருப்பீர்கள். அதனால் நீங்கள் கிராமத்தில் உள்ள 5 குழந்தைகளை நகரத்துக்கு கூட்டி வந்து, உயர்கல்வி பற்றி கற்று தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், என் தாழ்மையான வேண்டுகோள் உங்கள் குழந்தை எதை படிக்க வேண்டும் என்று விரும்புகிறதோ, அதை படிக்க வையுங்கள் என பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத்தார். தற்போது அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பு உள்ளது. பணத்துக்காக எதையும் செய்ய வேண்டாம். குழந்தைக்கு எது பிடிக்கிறதோ, அதை செய்ய குழுந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள் என்று கூறிய அவர் உனக்கு என்ன பிடிக்கிறதோ அதை செய் கண்ணா என்று குழந்தைகளிடம் சொல்லுங்கள். உங்கள் கனவை உங்கள் குழந்தைகளிடம் திணிக்காதீர்கள் என தெரிவித்தார். மேலும், நம் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு வர வேண்டும். 2047 ஆம் ஆண்டு நீங்கள் தான் இந்த நாட்டை ஆள போகிறீர்கள் என தெரிவித்த அவர், அதற்கு குழந்தைகளே உங்களை தயார் செய்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.