
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே அரசு பேருந்தின் பின்புறத்தில் லாரி மோதிய விபத்தில் சாலையோரம் இருந்த பள்ளமான வயலில் அரசு பேருந்து இறங்கி மின்கம்பம் மீது மோதியது. மின்கம்பம் உடைந்து சேதம், மின் இணைப்பபு துண்டிப்பால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு நகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அந்த பேருந்து ரெட்டியார்சத்திரம் அருகில் காமாட்சிபுரத்தை அடுத்த எல்லப்பட்டி பிரிவு என்ற இடத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது பேருந்தின் பின்பக்கத்தில் சரக்கு லாரி ஒன்று மோதியது. மோதிய வேகத்தில் அரசு பேருந்து சாலையோரம் இருந்த பள்ளமான வயலில் இறங்கி அங்கிருந்த மின் கம்பம் மீது மோதி நின்றது. இதில் மின்கம்பம் இரண்டாக உடைந்து சேதம் அடைந்தது. மின்கம்பம் மீது பேருந்து மோதிய வேகத்தில் மின்சார ட்ரான்ஸ்ஃபார்மரில் மின்தடை ஏற்பட்டதால் பேருந்து மீது மின்சாரம் பாயாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மேலும் பேருந்தில் போதிய பயணிகள் யாரும் இல்லாததால் பின்புறமாக பேருந்துக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டது. பயணிகள் பேருந்தின் பின் இருக்கையில் யாரும் இல்லாததால் யாருக்கும் காயம் இல்லை. தகவல் அறிந்து வந்த மின்வாரிய அலுவலர்கள் மின்வயர்களை சீர் செய்தனர். நின்றிருந்த அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.