நடைபாதை கடைகளை அப்புறப்படுத்தக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்...!

நடைபாதை கடைகளை அப்புறப்படுத்தக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்...!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சியில் நகரின் மையப் பகுதியான என்.ஜி.ஆர்.சாலையில் நகராட்சி வணிக வளாகம் மற்றும் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக என்.ஜி.ஆர். சாலையில் நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரிகள் சிலர் தள்ளு வண்டிகளிலும் தரையில் அமர்ந்தும் வியாபாரம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக நகராட்சிக்கு இலட்சக்கணக்கில் வரி செலுத்தி கடை நடத்தி வரும் வியாபாரிகள், தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் வரி செலுத்தாத கடைகளை உடனடியாக மூடி சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கும் நகராட்சி நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாக நடைபாதை கடைகளை அகற்ற கோரி மனு கொடுத்துள்ளனர். 

ஆனால் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இதனால் சாதாரண மற்றும் பண்டிகை காலங்களில் தங்களுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறி 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் என்.ஜி.ஆர்.சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தை வியாபாரிகள் விளக்கிக் கொண்டனர். இந்நிலையில் நடைபாதை கடைகளை நகராட்சி நிர்வாகம் அகற்ற முயல்வதாக கூறி  நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.