ஒரே இரவில் 9 அடி உயர்ந்த அணையின் நீர்மட்டம்...! விவசாயிகள் மகிழ்ச்சி..!

ஒரே இரவில் 9 அடி உயர்ந்த அணையின் நீர்மட்டம்...! விவசாயிகள் மகிழ்ச்சி..!
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் பருவ மழை தொடங்கி கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால்  நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக  47 அடி முழு கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 44 அடிவரை உயர்ந்ததன் காரணமாக அணையிலிருந்து கடந்த அக்டோர் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டமானது 25 அடியாக குறைந்தது.

மேலும் கடந்த சில தினங்களாகவே ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே இரவில் 9 அடி உயர்ந்துள்ளது.

47 அடி முழு கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 25 அடியாக  இருந்த நிலையில், அணைக்கு வினாடிக்கு 800 கன அடி வீதம் நீர்வரத்து உள்ளதால் அணையின் நீர்மட்டம் 34 அடியை எட்டியது. ஒரே இரவில் 9 அடி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com