
தேனி | கம்பத்தில் தமிழ்நாடு சைக்கிள் அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான சைக்கிள் போட்டிகளை நடத்தினார்கள். இந்த சைக்கிள் போட்டி கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இருந்து துவங்கி சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றது.
இந்த போட்டியானது 12 வயதுக்குட்பட்டவர்கள், 14 வயதுக்கு உட்பட்டவர்கள், 16 வயதுக்கு உட்பட்டவர்கள், 18 வயதுக்குட்பட்டவர்கள், 23 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 23 வயதுக்கு மேல் உள்ளவர்கள் என ஏழு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.
பதினாறு வயது மாணவர்களுக்காக நடந்த போட்டியில் 60 கிலோமீட்டர் வேகத்தில் சைக்கிள் ஒட்டி முதலாவது இடத்தில் வந்த வீரரின் சைக்கிளில் திடிரென செயின் கழற்று விழுந்ததால் வீரர் முதலாவதாக வந்து எல்லையை அடைய முடியாதது போட்டியாளர்களிடம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
இந்தப் போட்டியில் தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், சென்னை, சிவகங்கை, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் சுமார் 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் சைக்கிள் போட்டி பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.