122 ஆண்டுகளில் இல்லாத கனமழையால் சின்னாபின்னமாகிய சீர்காழி...!

சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. இதனால், சீர்காழி முழுவதும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.

122 ஆண்டுகளில் இல்லாத கனமழையால் சின்னாபின்னமாகிய சீர்காழி...!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தீவிரம் அடைந்துள்ள வடகிழக்கு பருவ மழை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்,  பரவலாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரே நாளில் அதிகபட்சமாக 44 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இடைவிடாமல் தொடர்ந்து பெய்த கனமழையால் டேனிஷ் கோட்டையை மழைநீர் சூழ்ந்தது. இதுவரை இப்படியொரு மழையை பார்த்ததில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

மேலும் படிக்க | சாலை வசதி செய்தி தரக்கோரி நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்...!

இந்த மழையால், அப்பகுதியில் பயிடப்பட்டிருந்த சுமார் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற் பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த 2 நாட்களாக, கொட்டித் தீர்த்த வரலாறு காணாத அதீத மழையால், சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், சட்டநாதபுரம், திருமுல்லைவாசல், கொள்ளிடம், பூம்புகார், திருவெண்காடு, ஆச்சாள்புரம், நல்லூர், தொடுவாய் உள்ளிட்ட  பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.

வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால்,  பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால், வீடுகளை விட்டு வெளியேர முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். தேனூர் கதவனையிலிருந்து பிரதான வாய்க்காலான முடவன் வாய்க்காலில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, விளை நீலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.

மேலும் படிக்க | மழைநீரும் கலக்கும் கழிவுநீர்.. டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம்..!

சூரக்காடு உப்பனாற்றின் கரைகள் உடைப்பு ஏற்பட்டுள்ளதால்,  மழை நீர் உட்புகுந்ததில்,  கரையோரம் உள்ள குடியிருப்புகள் மற்றும் நகர் பகுதியில் சுமார்  ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இங்குள்ள மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்படுள்ளனர். 

உப்பனாற்றில் உடைப்பு ஏற்பட்டதில், சீர்காழி அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்திற்கு செல்லக் கூடிய தரைப்பாலம் நீரில் மூழ்கியது.  இதனல், வெள்ளப்பள்ளம் கிராம மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | குடியிருப்பகளில் மழைநீர் புகுந்ததால் தொடக்கப்பள்ளியில் மக்கள் முகாம்...

இடியுடன் பெய்த கனமழை பெய்தால், சீர்காழி அடுத்த கீராநல்லூரில் உள்ள பள்ளி வாசல் கோபுரம் இடி தாக்கியதில் இடிந்து விழுந்து சேதமடைந்தது. சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில்,  பிரம்மபுரீஸ்வரர் கோயில் குளத்தில், மழை நீர் அதிக அளவில் நிரம்பியதால், கோவில் உள்பிரகாரம் முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளது.

இதனால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். இதேபோன்று, தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோயில் வளாகத்தில், முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். வரலாறு காணாத மழையால், சீர்காழி நகர் முழுவதும் சின்னாபின்னமாகியுள்ளது. 

மேலும் படிக்க | சென்னை மாநகராட்சியின் பருவமழை அறிவுறுத்தல்கள் என்னென்ன?