பொன்னேரி : அணைக்கட்டில் நிரம்பி வழியும் தண்ணீர்...! விவசாயிகள் மகிழ்ச்சி...!

பொன்னேரி : அணைக்கட்டில் நிரம்பி வழியும் தண்ணீர்...! விவசாயிகள் மகிழ்ச்சி...!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆரணியாற்றில் உள்ள அணைக்கட்டில் தண்ணீர் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொன்னேரி சுற்றுவட்டார விவசாயிகளுக்கு நிலத்தடி நீர் தேக்கி வைக்கும் வகையில் லட்சுமிபுரம் கிராமத்தில் 114 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் ஆரணியாற்றில் அணைக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் ஆரணியாற்றில் நீர்வரத்து அதிகரித்து, லட்சுமிபுரம் அணைக்கட்டு முழுவதும் நிரம்பி வழிகிறது. மொத்த கொள்ளளவான 114 மில்லியன் கனஅடி தண்ணீர் தற்போது அணைக்கட்டில் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 460கனஅடி தண்ணீர் அணைக்கட்டில் இருந்து வழிந்தோடுகிறது. மேலும் அணைக்கட்டில் இரண்டு கரைகளிலும் உள்ள மதகுகள் வழியே காட்டூர், பெரும்பேடு உள்ளிட்ட ஏரிகளுக்கு தலா 100 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பி அடுத்துள்ள ரெட்டிப்பாளையம் அணைக்கட்டிற்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. லட்சுமிபுரம் அணைக்கட்டு முழுமையாக நிரம்பி தண்ணீர் வழிந்தோடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  தற்போது ஏரிகள், குளங்கள் ஆகியவை ஓரளவு நிரம்பியுள்ள நிலையில் ஆற்றிலும் தண்ணீர் செல்வதால் இந்த ஆண்டு விளைச்சல் நன்றாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிக்க : கொளத்தூர் தொகுதியா? கன்னித்தீவா? ஜெயக்குமார் விமர்சனம்!