மதுக்கடையை அகற்ற கோரி போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கும் மக்கள்...!

மதுக்கடையை அகற்ற கோரி போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கும் மக்கள்...!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் தினமும் சராசரியாக மூன்று லட்ச ரூபாய்க்கு மது விற்பனையாவதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த மதுக்கடையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முத்துநாயக்கன்பட்டி, செல்லபிள்ளைகுட்டை, பாகல்பட்டி, பச்சனம்பட்டி ஆகிய நான்கு கிராமத்தின் எல்லைப்பகுதியில் இந்த டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. மேலும், அரசு மேல்நிலைப்பள்ளி, துவக்கப்பள்ளி, தனியார் மேல்நிலைப்பள்ளி, கோவில்கள், முத்துநாயக்கன்பட்டி வாரசந்தை, அரசு கால்நடை மருத்துவமனை, சிறுவர் பூங்கா என கிராமத்தின் மையப்பகுதியில் சுமார் 20 முதல் 100 அடி தூரத்திற்குள் இந்த மதுக்கடை செயல்பட்டு வருகிறது. 

இந்த மதுக்கடையால் பெண்கள், சிறுமிகள், மாணவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போதை ஆசாமிகளின் தொல்லையால் பூங்கா, திறக்கப்படாமலே சிதைந்து வருகிறது. சந்தையை ஆக்கிரமித்து மது குடிப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யகோரி கிராம ஊராட்சிகள் மற்றும் ஒன்றிய குழுவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் தரப்பில் பலமுறை போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் நடத்தும் அந்த சமயத்தில் மட்டும்  விரைவில் மாற்றுவதாக கூறும் அதிகாரிகள், பின்னர் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். 

இந்தநிலையில், நான்கு கிராமங்களை சேர்ந்த மக்களும் ஒன்றிணைந்து மதுக்கடையை அகற்ற கோரி வரும் 7-ம் தேதி போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். டாஸ்மாக் கடை மற்றும் கிராமத்தின் மையப்பகுதியில் போராட்ட அறிவிப்பு பேனரும் வைத்திருந்தனர். இந்தநிலையில், இன்று காலை முத்துநாயக்கன்பட்டி கிராமத்திற்கு வந்த சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கென்னடி, ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா மற்றும் போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இந்த கடையை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், போராட்டத்தை ஒத்தி வைக்குமாறும் தெரிவித்தனர். ஆனால், சேலம் மேற்கு எம்.எல்.ஏ அருள் மற்றும் கிராம மக்கள் கூறும்போது கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் வாக்குறுதியை நிறைவேற்றுவதில்லை என்றும் கூறினர். மேலும், திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.