"இயற்கையை கற்பிக்கும் தலைமை ஆசிரியர்..." குவியும் பாராட்டுகள்...

அரசு தொடக்கப்பள்ளியில், காய்கறி தோட்டம் அமைத்து, இயற்கை முறை விவசாயத்தை மாணவர்களுக்கு கற்பிப்பதுடன், அந்த காய்கறிகளை கிராம மக்களுக்கு வழங்கி சேவை ஆற்றி வருகிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர்.

"இயற்கையை கற்பிக்கும் தலைமை ஆசிரியர்..." குவியும் பாராட்டுகள்...

வெறும் பாட புத்தகத்தை மட்டும் கற்பித்தால், அது அறப்பணியாகாது. வாழ்க்கையையும், வாழ்வியல் முறைகளையும் கற்றுக் கொடுப்பதால் தான் ஆசிரியப் பணியை, அறப்பணி என்று கூறுகிறோம். அந்த வகையில், கும்மிடிப் பூண்டி அருகே, பாடத்துடன்,  இயற்கையோடு இணைந்து வாழும் முறையை கற்பித்து வருகிறார் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர். 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி அடுத்த ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப் பள்ளியில் பரமசிவன் என்பவர் கடந்த பத்தாண்டுகளாக தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

மேலும் படிக்க | மருத்துவப்படிப்பில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க மின்னஞ்சல் முகவரி அறிமுகம்..!

சாகுபடி செய்யும் தலைமை ஆசிரியர் :

இயற்கை விவசாயத்தின் மீது தீராத காதல் கொண்ட இவர், இயற்கை விவசாயத்தை மாணவர்களுக்கு கற்பிப்பதன் மூலம் அடுத்த தலைமுறையினரை ஆரோக்கியமான தலைமுறையாக மாற்ற முடியும் என திடமாக நம்பினார்.

இதற்காக பள்ளி வளாகத்தில், பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த நெல்லி, இலுப்பை, மருதமரம், புளியமரம், உள்ளிட்ட மரங்களை வளர்த்து வருகிறார். மேலும் அபூர்வ வகையான, வாகை மரம், வில்வமரம், புங்கைமரம் உட்பட சுமார் 200 வகை மரங்களையும் நட்டு வளர்த்து வருகிறார். 

மேலும் படிக்க | ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...! சிறப்பு முகாமுக்கான தேதி அறிவிப்பு..!

தொடக்கப்பள்ளியில் இயற்கை விவசாயம் :

ஒருகட்டத்தில் இந்த கிராம மக்களுக்கும் ஏதாவது  செய்ய வேண்டும் என்று எண்ணிய  ஆசிரியர், கடந்த நான்காண்டுகளாக பள்ளி வளாகத்தில் காய்கறி தோட்டம் அமைத்து இயற்கை முறையில் பராமரித்து வருகிறார். 

கத்தரி, வெண்டை, பாகற்காய், முள்ளங்கி, பீட்ரூட், கொத்தவரங்காய், பீர்க்கங்காய், அவரைக்காய் உள்ளிட்ட சத்தான காய்கறிகளை பயிரிட்டு வருவதுடன், அதன் பலன்களையும் எழுதி தொங்க விட்டுள்ளார். இந்த காய்கறிகளை மாணவர்களை கொண்டே அறுவடை செய்து, காய்கறிகளை சாப்பிடும் ஆர்வத்தை தூண்டுகிறார். 

மேலும் படிக்க | சிறுபான்மை மாணவர்களுக்கு உதவி தொகை திட்டமா? மத்திய அரசு அதிரடி...

மாணவர்களைக் கொண்டு அறுவடை :

பள்ளியில் விளையும் இந்த காய்கறிகள், கீரைகள் நாள்தோறும் பறிக்கப்பட்டு, அருகில் உள்ள சத்துணவு கூடத்திற்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள காய்கறிகளை மாணவர்களின் வீடுகளுக்கு கொடுத்தனுப்புகிறார் தலைமை ஆசிரியர்.

காய்கறிகள் மட்டுமல்லாமல் மாதுளை, கொய்யா, நாட்டு வாழை, மலை வாழை, கற்பூர வாழை, பப்பாளி, நாவல் உள்ளிட்ட பழவகை மரங்களையும் வளர்த்து வரும் இவர், இவை அனைத்தையும் மாணவர்களின் வீடுகளுக்கு  கொடுத்து மன நிறைவை பெறுகிறார். 

மேலும் படிக்க | மீண்டும் பள்ளிக்கு போகலாம்... நம்மை நாம் அங்கே தேடலாம்...

வளமான தலைமுறையை உருவாக்க...

மலர் வகைகள், காய்கறி செடிகள், மரங்கள் என ஒரு குட்டி பிருந்தாவனம் போல் காட்சி அளிக்கிறது இந்த ஊராட்சி தொடக்கப்பள்ளி. பள்ளிக்கு வந்தோமா, பாடம் நடத்தினோமா என்றுமட்டும்  இல்லாமல், மாணவர்களுக்கு இயற்கையை கற்பித்து, இயற்கையோடு வாழ கற்பித்து, கிராம மக்களுக்கும் சேவை ஆற்றிவரும் இந்த தலைமை ஆசிரியரை எத்தனை பாராட்டினாலும் தகும்.

மாலைமுரசு செய்திகளுக்காக கும்மிடிபூண்டியிலிருந்து செய்தியாளர் சந்திரசேகர்.....  

மேலும் படிக்க | மாணவர்களுக்கு லஞ்ச ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு குறும்படம்...